எலி மருந்து சாப்பிட்டு அரசுப் பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி - சேலத்தில் பரபரப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. மாணவிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சந்தித்து விசாரணை.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த 4 மாணவிகள் இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். கடந்த நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, நண்பர்கள் வீட்டிற்கு நான்கு மாணவிகளும் சென்றுள்ளனர். பின்னர் விடுமுறை முடிந்து அடுத்த நாள் பள்ளிக்கு வராத நிலையில் இது தொடர்பாக ஆசிரியர்கள் மாணவிகளின் இல்லத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். மாணவிகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பள்ளி விடுதியில் சென்று பார்த்த போது பள்ளி விடுமுறையில் நால்வரும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று விட்டு விடுதிக்கு நேரடியாக வந்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிந்துவிட்ட பயத்தில் நான்கு மாணவிகளும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். உடனே நான்கு மாணவிகளையும் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், மாணவிகளை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். மேலும் தொடர்ந்து நான்கு மாணவிகளுக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”பத்தாம் வகுப்பு மாணவி நால்வரும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திட்டி விடுவார்கள் என்ற பயத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். நான்கு மாணவிகளும் அபாய கட்டத்தை தாண்டி பாதுகாப்பாக உள்ளனர். தொடர்ந்து மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்று வருவதை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களை அழைத்து பேசி உள்ளதாகவும், விரைவில் ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போதும் ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)