காவிரி கரையோரம் வெள்ள அபாயம்! மேட்டூர் அணை நீர் திறப்பு: சேலம் மக்களுக்கு எச்சரிக்கை, நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக நேற்று காலை முதல் மீண்டும் உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

சேலம் : 16 கண் மதகு வழியாக மேட்டூர் அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை இன்றைய நிலவரம்
கர்நாடகாவில் தென்மே ற்கு பருவமழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை முதல் நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 23,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 30,800 கனஅடியாக அதிகரித்தது. அணையின் 16 கண் மதகுகள் வழியாக நேற்று காலை முதல் மீண்டும் உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 22,500 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 7,500 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல, கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் தொடர்கிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. 16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடைவிதித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் 8வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.





















