EPS Speech: திமுக மன்னராட்சி முறை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றது - எடப்பாடி பழனிசாமி
திமுக மன்னராட்சி முறை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். திமுக சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறது எனவும் விமர்சித்தார்.
சேலம் மாநகர் மல்லமூப்பன்பட்டி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுக, பாமக, உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் விலகி அதிமுகவில் இணைத்து கொண்டனர். இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி செய்த காலம் ஒரு பொற்காலம், எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக அள்ளிக் கொடுத்தார். முதியோர்கள் கொடுக்கும் மனுக்களை பரிசீலித்து பார்த்து சட்டமன்றத்தில் ரூ.50 லட்சம் முதியோர் உதவி தொகை வழங்கப்படும் என்று அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு கொடுக்கப்படுகின்ற திட்டம் என்றார்.
ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று அதிகமான பள்ளிகளை திறந்து சிறந்த கல்வி கொடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி தான். ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்கின்ற நிலையை அதிமுக தான் உருவாக்கி கொடுத்தது. சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரித்திரம் படைத்த தலைவர் எம்ஜிஆர் தான். ஏழை மக்களுக்கு என்ன தேவை உள்ளது என அறிந்து அதிமுக அரசாங்கத்தில் தான் கொடுத்தது என்று பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பதில் முதன்மை மாநிலம் தமிழகம் என்று விளங்கியது. கல்வி கற்பதில் முதன்மை மாநிலம் தமிழகமென்ற நிலைக்கு வந்தது. 30 ஆண்டுகள் ஆட்சியில் கல்வியில் மறுமலர்ச்சி, புரட்சி செய்து மாணவ மாணவிகள் நல்ல நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளது. கூலி விவசாய தொழிலாளரின் பிள்ளைகள் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம், ஏழை மாணவர்களுக்கு கானல்நீராக இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான் என்றும் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. இந்த திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை நடந்துள்ளது என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடலாம். எந்த நன்மையும் கிடைக்கவில்லை. திமுக என்பது ஒரு குடும்பக் கட்சி ஒரு கம்பெனி. திமுக இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியை அழைத்து வந்துவிட்டனர். திமுக மன்னராட்சி முறை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். திமுக சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறது. திமுக குடும்பத்தில் அதிகார மையங்கள் அதிகரித்துவிட்டது. திமுகவில் தான் 4 முதலமைச்சர்கள் இருந்து வருகின்றனர். அதனால் தான் எந்த நன்மையும் கிடைக்காமல் தமிழகம் திண்டாடி கொண்டு இருக்கிறது என்றும் விமர்சனம் செய்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை அதிகம் நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் இயல்பாக கஞ்சா கிடைக்கும் நிலையில் உள்ளது. இப்படிப்பட்ட நிலை தான் தமிழகத்தில் இருந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் விலைவாசிகள் விண்ணைமூட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. ஆனால் அதிமுக ஆட்சி விலைவாசியை கட்டுக்குள் வைத்து இருந்தோம். விலைவாசி உயராமல் மக்களை பாதுகாக்க அரசாங்க அதிமுக அரசாங்கம் தான். எனவே தமிழகத்தில் பொருட்களின் விலையை 2021 க்கும் 2024 ஆம் ஆண்டும் இடையே ஒப்பிட்டு பார்க்கவேண்டும். விலைவாசி உயர்ந்துவிட்டது செலவு அதிகரித்துவிட்டது தான் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயம் படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்றும் கூறினார். அதிமுகவில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக தான். அதிக ஆட்சி புரிந்த கட்சியும் அதிமுக தான் என்ற பெருமையும் பெற்றுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.