சேலத்தில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! பயிற்சியாளர் கைது, தலைமறைவானவர் யார்?
சேலத்தில் 14 வயது சிறுமியை, விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்: சேலத்தில் 14 வயது சிறுமியை, விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக, பயிற்சியாளரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது தம்பியை தேடி வருகின்றனர்.
சேலம் அருகே சித்தனூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார். இதனால், போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பல இடங்களுக்கு சிறுமி சென்று வந்துள்ளார். கடந்த 6ம் தேதி, திருவாரூரில் நடந்த போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இந்த போட்டிக்கு சிறுமி உள்பட பலரை, சேலம் சிவதாபுரத்தில் உள்ள தேக்வாண்டோ பயிற்சி அளிக்கும் மாஸ்டர் விஜயகுமார் (வயது 44) என்பவர் அழைத்து செல்ல இருந்தார். ஆனால், உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக சென்று விட்டதால், தனது சகோதரரான வெள்ளி பட்டறை தொழிலாளி கணேசன் (வயது 42) என்பவரை, தனக்கு பதிலாக அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது, போட்டிக்கு சென்ற சிறுமியிடம், கணேசன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த விஜயகுமார், திருவாரூருக்கு சென்று, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லகூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே, போட்டி முடிந்து சிறுமி சேலத்துக்கு வந்ததும், நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சூரமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கணேசன், உடந்தையாக இருந்த மாஸ்டர் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், விஜயகுமாரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.
போச்சோ சட்டம்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.
இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.





















