முதலமைச்சர் தங்களுக்காக நேரம் ஒதுக்கியது மகிழ்ச்சி - சேலம் மாணவர்கள்
பொறியியல் கல்லூரியில் மட்டும் வழிகாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கலை கல்லூரிகளிலும் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் கூறியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முதல் ஆய்வுக் கூட்டமாக விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தாட்கோ திட்ட பயனாளிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், லாரி கட்டுமான தொழில் நிறுவனங்கள், மாம்பழ கூழ் உற்பத்தி நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள், ஆடை உற்பத்தியாளர்கள், சிறுதானிய மதிப்பு கூட்டுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மலையகப்பகுதி பழங்குடியின மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும், அரசின் திட்டங்கள் மூலமாக எந்தளவில் பயன் பெற்றுள்ளார்கள் என்பது குறித்தும், பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு தரப்பில் உள்ள தேவைகள் குறித்தும் விவசாயிகள் மட்டும் தாட்கோ பயனாளிகளிடம் தமிழக முதல்வர் கேட்டறிந்தார். மேலும் சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எந்தளவில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கான சலுகைகள் எந்தளவில் வழங்கினர் என்பது குறித்தும் அந்தந்த துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், தாட்கோ திட்ட இயக்குனர், வேளாண்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் படித்த இளைஞர்கள் பிரச்சினைகளை இருந்து வருகின்றனர். இதை முற்றிலும் எதிர்காலத்தில் போக்கும் வகையில் நான் முதல்வன் எனும் சிறப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு மாநில மற்றும் மத்தியஅரசின் உதவி திட்டத்தின் கீழ் இலவச வேலைவாய்ப்புடன் தொடர்புடைய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 14,467 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் முழுவதும் எட்டு முகாம்கள் மூலமாக சிறந்த கல்வியாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் கொண்டு மாணவர்களுக்கான உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 17 முகாம்கள் மூலமாக சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலமாக 17,114 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். முகாம்கள் மூலம் எவ்வாறு பயனடைந்தார்கள் என்பது குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் மற்றும் கருத்தாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது குறித்தும் ஆய்வில் பேசப்பட்டது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கல்வித்துறை உயர் அதிகாரிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக முதல்வர் மாணவர்களுக்காக நேரம் ஒதுக்கி எங்களுடன் கலந்து உரையாடல் மேற்கொண்டது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியதாக மாணவர்கள் தெரிவித்தனர். நான் முதல்வன் திட்டத்தின் நிறை, குறைகளை முதல்வர் கேட்டறிந்ததாகவும், தற்போது பொறியியல் கல்லூரியில் மட்டும் வழிகாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கலை கல்லூரிகளிலும் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் கூறியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.