ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்டு கல்விக்கூடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு
அறநிலையத்துறை கோயில்கள் தனியார் சொத்துக்கள் அல்ல. அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்கமுடியும்?
தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சேலத்தில் உள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக திருப்பணிகள் நடைபெற்று வரும் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, பணிகள் தொடங்கப்பட்ட காலம், கால தாமதம் ஆவதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கி இதுவரையில் நிறைவடையாமல் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோயில் பணிகளையும், 2019ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வரும் சுகவனேஸ்வரர் கோவில் திருப்பணிகளையும் விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ”தமிழகத்தில் ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் வருவாய் உன்ன 539 கோவில்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆகம விதிகளின் படி அவற்றை புனரமைக்க மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். அறநிலையத்துறையை கலைப்பது தொடர்பாக பாஜக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அறநிலையத்துறை கோயில்கள் தனியார் சொத்துக்கள் அல்ல, கோவில்கள் அனைத்தும் உலகமே வியக்கும் வகையில் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதற்கான நிலங்கள் அனைத்தும் ஜமீன்தார்கள் மற்றும் செல்வந்தர்களால் தானமாக வழங்கப்பட்டது. மக்களாட்சி வந்த பின் அதை அரசு நிர்வகிக்கிறது” என்று விளக்கமளித்தார்.
அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும் கேள்வி எழுப்பிய அமைச்சர் சேகர் பாபு இந்த விவகாரத்தில் பொது நல வழக்கு என்பது குழப்பத்தை ஏற்படுத்தி தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக பாஜக முன்வைக்கும் வாதம் என்றும், குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
நாற்பது ஐம்பது ஆண்டுகளாக கோயில்களுக்கு சொந்தமான வாடகை நிலைமைகளை வசூலிப்பது ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து மீட்பது வாடகை செலுத்தாத ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், காணிக்கையாக கிடைத்த தங்க நாணயங்களை தேவைப்படும் அளவிற்கு வைத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை உருக்கி பிஸ்கட்டுகள் ஆக மாற்றி வைப்பு நிதியாக முதலீடு செய்து அவற்றின் மூலம் இரண்டரை சதவிகிதம் வட்டி ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வரை வட்டி கிடைக்கும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு மண்டபங்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டில் இருக்கும் திருடப்பட்ட சிலைகளை கண்டுபிடித்து அவற்றை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின் போது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.