சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் வணிகவியல் நீதிமன்றம் திறப்பு..!
தேரின் இருசக்கரங்கள் போல வழக்கறிஞர்கள் நீதித்துறையுடன் இணைந்து செயல்பட்டால் வழக்குகளில் விரைவான தீர்வு கிடைக்கும் என்றும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சேலத்தில் பேச்சு.
சென்னைக்கு அடுத்தப்படியாக சேலத்தில் வணிகவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.3.07 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வணிகவியல் நீதிமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி வணிகவியல் நீதிமன்றத்தை திறந்து வைத்து, நீதிமன்ற செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். இதனையடுத்து சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வழக்கறிஞர்களுக்கான அறைகள் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அவர், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றுதல் அவர், வணிகவியல் சார்ந்த வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வணிக மையமாக இருக்கும் சேலம் மாவட்டத்தில் 2 வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நீதித்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும், வணிகர்களுக்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் இந்த வணிகவியல் நீதிமன்றம் நன்மையை அளிக்கும். இந்த நீதிமன்றம் செயல்படுவதற்கு வழக்கறிஞர்கள் நீதித்துறையுடன் இணைந்து செயல்பட்டால், வழக்குகளில் துரிதமான தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டின் மூதலீடுகள் அவசியமாகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயக்கமின்றி வருவதற்கு வணிகம் சார்ந்த பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு அவசியமாகிறது.
வழக்குகளில் தாமதம் வளர்ச்சியை தாமதப்படுத்தும். உடனடித் தீர்வு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால் இது போன்ற வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வணிகம் சார்ந்த வழக்குகள், வணிகத்துறையினர் முதலீட்டாளர்கள் ஆகியோரது பிரச்னைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும். நாட்டின் பொருளாதாரமும் இதன்மூலம் வளர்ச்சியடையும். தாமதமின்றி தீர்வு கிடைக்கும் நீதிமன்றத்துடன் வழக்கறிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும். தேரின் இரு சக்கரங்கள் போல நீதித்துறையும், வழக்கறிஞர்களும் இணைந்து செயல்படும்போது விரைவான தீர்வு வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிடைக்கும். சேலத்தில் வழக்கறிஞர்களுக்கான 32 அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் 32 அறைகள் கட்ட கோரிக்கை வைத்தால் அரசின் பரிசீலனைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், சதீஸ் குமார், அப்துல் குத்தூஸ், இளந்திரையன், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் சேலம் மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் என கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்