’அதிமுக மாநில மகளிரணி செயலாளர் பதவி’ ரேசில் முந்தப்போவது யார்..?
ஜெயலலிதா இருந்தபோது மகளிர் அணி உள்ளிட்ட 16 அணிகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது இல்லையென புலம்புகின்றனர் அதிமுக அணிகளின் நிர்வாகிகள்
அதிமுக மகளிர் அணி செயலாளராக இருந்த விஜிலா சத்தியானந்த், திமுகவில் இணைந்த நிலையில் காலியாக உள்ள மகளிர் அணி செயலாளர் பொறுப்பை பிடிக்க பலர் முட்டி மோதி வருகின்றனர்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது டிடிவி தினகரன் அணிக்கு சென்ற விஜிலா, பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக மாநில மகளிரணி செயலாளர் பொறுப்பை ஒபிஎஸ் –ஈபிஎஸ் வழங்கினர். தனது எம்.பி. பதவி முடிந்த நிலையில், நெல்லை பாளையங்கோட்டையில் போட்டியிட வாய்ப்பு கேட்ட விஜிலாவுக்கு, தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த விஜிலா, அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில், காலியாக உள்ள அதிமுக மாநில மகளிரணி செயலாளர் பதவியை பெற பலர் முட்டிமோதினாலும், முன்னாள் அமைச்சர்களான வளர்மதி, கோகுல இந்திரா இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மகளிர் அணி செயலாளருக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்படும். அங்கிருந்தப்படியே மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கட்சிப் பணி குறித்து அவர் விவாதிக்கலாம். ஜெயலலிதா இருந்தவரை மகளிர் அணிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த முக்கியத்துவம் இல்லாததால்தான் விஜிலா திமுகவில் இணைந்துள்ளார். எனவே, புதிய மகளிர் அணி செயலாளரை நியமித்து, மீண்டும் மகளிர் அணி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை உள்ளிட்ட அணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியை பலப்படுத்தவும், யாரும் கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு போவதை தடுக்கவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
கட்சியில் இரட்டைத் தலைமை இருப்பதனாலும், சசிகலா தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டு வருவதாலும் அதிமுகவில் நிலைத் தன்மை இல்லை என்று எண்ணி, தங்களது அரசியல் எதிர்காலம் கருதி பலர் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். விஜிலா சத்தியானத்தை போன்றே அதிமுக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிசந்திரனும் திமுகவில் இணைந்தார். இவர்கள் மட்டுமல்லாமல், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் போன்றோர்களும் அடுத்தடுத்து திமுகவில் இணைந்ததால், அதிமுக தலைமை சற்று அதிர்ந்துதான் போய் உள்ளது.
எனவே கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தவும், ஆளுங்கட்சிக்கு எதிராக கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்து, திமுக எதிர்ப்பரசியலை கையில் எடுத்து கட்சியை உயிரோட்டமாக வைக்கவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
எனவே, முதலில் காலியாக உள்ள மாநில மகளிர் அணிச் செயலாளர் பதவிக்கு ஒருவரை நியமிக்க முடிவு எடுத்துள்ள நிலையில், அந்த ரேசில் வளர்மதி – கோகுலா இந்திரா இருவரும் முந்தி வருகின்றனர். கோகுல இந்திரா ஏற்கனவே அதிமுக மகளிர் அணி செயலாளராக இருந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகதான் உள்ளது. தற்போது இலக்கிய அணி செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் வளர்மதியை மகளிர் அணி செயலாளராக நியமிக்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.