பரப்புரையில் பட்டையை கிளப்பும் விஜயபாஸ்கர் மகள்கள்
“அவருக்கு ஒரு தடவ வாய்ப்பு கொடுத்தீங்க காவேரி தண்ணீர கொண்டு வந்தாரு, இன்னொரு தடவ வாய்ப்பு கொடுத்தா காவேரி ஆறையே கொண்டு வருவாரு, உங்களுக்காக உழைச்சாரு, உழைப்பாரு” என பேசினார் விஜயபாஸ்கரின் மூத்த மகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். தனது குடும்பத்தினரை கட்சி பணிகளில் ஈடுபடுத்தாமல் தவிர்த்து வந்த விஜயபாஸ்கர், அவரது வீட்டில் நடந்த அதிரடி வருமானவரித்துறை சோதனைக்கு பிறகு அதனை கைவிட்டார்.
வருமானவரித்துறை சோதனையின் போது தனது மகள்களோடு சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். ஆனால் அதன்பின் நடந்த மக்களவை தேர்தல், ஜல்லிக்கட்டு விழா போன்றவற்றிலும் மகள்களோடு வலம் வந்தார் விஜயபாஸ்கர். இந்நிலையில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் விஜயபாஸ்கர் , பரப்புரை கூட்டங்களில் தனது மகள்கள் மூலம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய விஜயபாஸ்கரின் மூத்த மகள் ரிதன்யா ”இவர் எங்க அப்பானு சொல்றத விட உங்க வீட்டு பிள்ளைனு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும், அவருக்கு ஒரு தடவ வாய்ப்பு கொடுத்தீங்க காவேரி தண்ணீர கொண்டு வந்தாரு, இன்னொரு தடவ வாய்ப்பு கொடுத்தா காவேரி ஆறையே கொண்டு வருவாரு, உங்களுக்காக உழைச்சாரு, உழைப்பாரு” என பேசினார்.
மற்றொரு கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கரின் சின்ன மகள் அனன்யா , அடுக்குமொழியில் பேசி வாக்கு சேகரித்தார். எப்பவுமே உங்களுக்காகத்தான் உழைப்பாரு, உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா துடிச்சு போயிடுவாரு, காது கேட்கலனா காது மெஷினா இருப்பாரு, கண் தெரிலனா கண்ணாடியா வருவாரு, கஜா புயல்னா கரெண்டா வருவாரு, காய்ச்சல்னா மாத்திர மருந்தா வருவாரு” என அடுக்கடுக்காக பேசினார். விஜயபாஸ்கரின் மகள்கள் செய்யும் இந்த பரப்புரை விராலிமலை பகுதியில் மக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த யுக்தி ஓட்டாக மாறுமா என்பது தற்போதுள்ள கேள்வி.