(Source: ECI/ABP News/ABP Majha)
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
”திமுகவை திராவிட மாடல் அரசையும் நேரடியாக தாக்கி பேசு வரும் விஜயுடன் ஒரே மேடையில் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளன் பங்கேற்பதை திமுக தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது”
ஆட்சியில் பங்கு என்று முழக்கத்தை சில நாட்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா எழுப்ப திமுக கூட்டணியே பரபரப்பானது. பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் பேசிய பிறகு அந்த நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் அணையாமல் இன்று வரை தகித்தே வருகிறது. அதற்கு தீனிப்போட்டு மேலும் வளர்க்கும்விதமாக இன்னொரு நிகழ்வு விரைவில் அரங்கேறவிருக்கிறது.
அது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் ஒரே நிகழ்ச்சியில் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றப்போவதுதான்.
எங்கே ? எப்போது ?
சென்னையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள புத்தகத்தை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. விஜயுடன் திருமா ஒரே மேடையில் அமர்வதற்கும் திருமாவுடன் விஜய் சேர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும் ஆதவ் அர்ஜூனா இருவரையும் ஒத்துக்கொள்ள வைத்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
திருமாவளவனுக்கு தொலைபேசி மூலம் விஜய் வாழ்த்து சொன்னது, விஜயின் மாநாட்டிற்கு முதல் ஆளாக திருமாவளவன் வாழ்த்துச் சொல்லியது என இருவருக்குள்ளும் பரஸ்பரம் நட்பு இருந்து வரும் நிலையில், இருவரும் முதன்முறையாக பொதுவெளியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பது அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கூட்டணி கணக்கு மாறுகிறதா ?
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என தன் பங்கிற்கு விஜயும் கொளுத்துப்போட்டுள்ள நிலையில், ஏற்கனவே இது குறித்து பேசி பரபரப்பை உண்டாக்கிய ஆதவ் அர்ஜூனாவே இந்த நிகழ்ச்சிக்கான பொறுப்பை ஏற்று திருமாவளவனையும் விஜயையும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க சம்மதம் வாங்கியிருக்கிறார்.
திமுக கூட்டணியிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என்று திருமாவளவன் தொடர்ந்து சொல்லி வந்தாலும் தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் எதார்த்தம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதிருப்தியில் திமுக ?
விஜய் நேரடியாக திமுகவை விமர்சித்து தாக்கி பேசி வரும் நிலையில், கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் விஜயோடு ஒரே மேடையை பகிர்ந்துக்கொள்வதை திமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து திருமாவளவனுக்கு நெருக்கமானவர்கள் மூலம் திமுக தலைமை தங்களுடைய வருத்தத்தை தகவலாக அனுப்பியிருப்பதாகவும் ஆனால் விஜயையும் திருமாவளவனையும் ஒரே மேடையில் நிறுத்திவிட வேண்டும் என்பதில் ஆதவ் அர்ஜூனா பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.