காலை அருள்.. மாலை ஜி.கே.மணி! அடுத்தடுத்து MLA-க்களுக்கு நெஞ்சுவலி! அதிர்ச்சியில் பாமகவினர்
பாமகவுக்குள் ஏற்கனவே பல குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது அக்கட்சி எம் எல் ஏக்களுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை கட்சிக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பாமக எம் எல் ஏ அருளை தொடர்ந்து தற்போது ஜி கே மணிக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி-ராமதாஸ் மோதல்:
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நடக்கும் மோதல் அக்கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்த போது தொடங்கிய இந்த மோதல், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தபோது விஸ்வரூபம் எடுத்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அன்புமணியோ நேரில் சென்று சந்தித்தும் பொது மேடையிலும் கூட ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். எனினும் ராமதாஸ் தர்ப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இந்நிலையில் இருவரும் தனித்தனியே நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எம்.எல்.ஏதிடீர் நெஞ்சுவலி:
நேற்று திருப்பத்தூரில் அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து நாளையும் அன்புமணி தலைமையில் கட்சிக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியினருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சபாநாயகரைச் சந்திக்க சிறிது நேரத்திற்கு முன்பு சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்த சேலம் மேற்கு தொகுதி பாமக எம் எல் ஏ அருள்-க்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜி.கே மணிக்கு திடீர் உடல்நலக்குறைவு:
அடுத்த சில மணி நேரங்களிலேயே பாமக கௌரவ தலைவரும் பென்னாகரம் தொகுதி எம் எல் ஏவுமான ஜி கே மணி நெஞ்சுவலி ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாமக எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் அனுமதி#PMK #GKMani #tamilpolitics #AnbumaniRamadoss #ABPNadu pic.twitter.com/wghAxj0Cvt
— ABP Nadu (@abpnadu) June 18, 2025
பாமகவுக்குள் ஏற்கனவே பல குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது அக்கட்சி எம் எல் ஏக்களுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















