TVK Vijay: ”யாராக இருந்தாலும் மரபை பின்பற்றனும்” ஆளுநருக்கு எதிராக களமிறங்கிய விஜய்.! என்ன சொன்னார்?
TVK Vijay- Governor RN Ravi: தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்கில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்த நிலையில் அதற்கு எதிராக விஜய் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
ஆளுநர் ஆர். என்.ரவி கருத்து:
தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து உரையை வாசிக்காமல், ஆளுநர் வெளியேறிய நிலையில், அதுகுறித்து ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சர் இடமும் சட்டப்பேரவை சபாநாயகரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read: DMK: ”தனி ராஜாங்கம் நடத்த ஆளுநர் முயற்சிக்கிறாரா?” ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக; நடந்தது என்ன?
தவெக தலைவர் விஜய்:
தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.