TVK Vijay: த.வெ.க மாநாடு தள்ளிப்போகிறதா.? நாளை விஜய் அறிவிக்கவுள்ள முக்கிய அறிவிப்பு.?
TVK Conference: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கட்சி மாநாடு நடைபெறுவது குறித்தான அறிவிப்பை நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TVK First Conference: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்தான முக்கிய தகவலை , நாளை ( செப்.12 ) காலை 11 மணிக்கு விஜய் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க அரசியல்:
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக விஜய் தலைவர் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, தலைவர் விஜய் கடந்த 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். இதையடுத்து, இந்த கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் 23ம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரியதாக தகவல் வெளியானது.
முதல் மாநாடு:
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு 23 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்த விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநாடு நடத்த என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பது குறித்து 21 கேள்விகள் கேட்கப்பட்டு நோட்டீஸ் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளர் காத்தமுத்து வழங்கினார்.
விஜய் மாநாட்டிற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல் துறையின் 21 கேள்விகளுக்கு பதில் விளக்கத்தினை விழுப்புரம் டி எஸ் பி அலுவலகத்தில் , தமிழக வெற்றிக் கழகத்தினர் வழங்கினர். இதையடுத்து மாநாட்டுக்கான அனுமதி பெறுவதில் கால நீட்டிப்பு ஏற்பட்ட நிலையில், பின்னர் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
தள்ளிப்போகிறதா மாநாடு.?
இந்த தருணத்தில், ஏற்கனவே குறிக்கப்பட்ட தேதியான வரும் 23 ஆம் தேதிக்கு, சில நாட்களே உள்ள நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தயார் செய்வதில் சிரமம் இருப்பதாக த.வெ.க வினர் தெரிவிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மாநாட்டு தேதியை சற்று தள்ளி வைக்கலாம் என்றும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக கழகத்தின் மாநாட்டு தேதியை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை காலை சுமார் 11 மணியளவில் அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வமாக நடைபெறும் இடம் குறித்து தகவலையும் தெரிவிப்பார் என்ற தகவலையும் தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.