TVK Vijay: 69,400 பூத் ஏஜெண்ட்கள்.. திமுக-வை ஆட்டிப்பார்க்க இவர்கள்தான் அஸ்திரம் - விஜய் ஸ்கெட்ச் கைகொடுக்குமா?
தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் 69 ஆயிரத்து 400 பூத் ஏஜெண்டுகளை நியமித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக இவர்களை தீவிர பணியாற்ற கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு நாளும் அரசியல் பரபரப்பு எகிறிக்கொண்டே போகிறது. வழக்கமாக இருக்கும் பரபரப்பை காட்டிலும் கூடுதல் பரபரப்பு இருப்பதற்கு முக்கிய காரணம் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் விஜய் இந்த அரசியல் களத்தில் பங்கெடுத்து இருப்பதே காரணம் ஆகும்.
தயாராகும் விஜய்:
கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கியதும் பெரும் பரபரப்பு உண்டாகியது. அதன்பின்பு, அதிரடி அரசியலை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய் அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருமாவளவனுக்கு வெளிப்படையாகவே கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் அவர் கூட்டணிக்கு வரத் தயக்கம் காட்டி வருகிறார். திரையில் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்தாலும், கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் வைத்திருந்தாலும் விஜய்யுடன் கூட்டணி வர எந்த கட்சியினரும் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் விஜய் திட்டவட்டமாக உள்ளார்.
69 ஆயிரம் பூத் ஏஜெண்டுகள்:
அதற்காக அவர் கீழ்மட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவதில் மிகவும் உறுதியாக உள்ளார். இதற்காகவே பூத் ஏஜெண்டுகள் நியமனத்தில் மிகவும் கவனமாக இருந்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தற்போது தமிழ்நாடு முழுவதும் 69 ஆயிரம் பூத் ஏஜெண்டுகள் உள்ளனர். அந்த கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தவெக-விற்கு 69 ஆயிரம் பூத் ஏஜெண்டுகள் இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டிலே அதிகளவு பூத் ஏஜெண்டுகள் உள்ள கட்சியாக திமுக உள்ளது. திமுக-வை எதிர்த்து களமிறங்கியுள்ள தவெக, ஒவ்வொரு பூத் ஏஜெண்டையும் தீவிரமாக பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. தற்போது வரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு 69 ஆயிரத்து 400 பூத் ஏஜெண்டுகள் உள்ளனர்.
தலைமை உத்தரவு:

ஒரு தொகுதியில் 275 பூத்கள் இருக்கிறது. ஒவ்வொரு பூத் ஏஜெண்டும் 250 குடும்பத்தினரை சந்திக்கவும், 250 குடும்பத்தின் வாக்குகளும் அந்த பூத் ஏஜெண்டின் பொறுப்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த பூத் ஏஜெண்டுகளிடம் மக்கம் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என்ற அடைமொழியில் விஜய்யை கொண்டு சேர்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் எண்ணிக்கை சேர்க்கையை வலுப்படுத்துவதற்காக 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் திமுக-வை வீழ்த்துவது என்பது மிகப்பெரிய சவால் என்பதாலும், தற்போது வரை விஜய்யுடன் கை கோர்க்க யாரும் வராததும் தவெக-விற்கு பின்னடைவாக உள்ளது.
களப்பணி அவசியம்:
இதனால், தமிழக வெற்றிக் கழகம் அனைத்து பூத் ஏஜெண்டுகளை தீவிரமாக களப்பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பூத் ஏஜெண்டுகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகள், பிரச்சினைகள், கோரிக்கைகளை கண்டறியவும் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக-வின் கீழ்மட்டம் மிகவும் வலுவாகிவிட்டால் கண்டிப்பாக திமுக-விற்கு சவால் அளிக்க முடியும் என்று விஜய் நம்பிக்கையுடன் உள்ளார். அடுத்த 10 மாதம் கட்சி நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பம்பரமாக பணியாற்ற விஜய் வலியுறுத்தியுள்ளார்.





















