புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!
புதுச்சேரியில் அமைச்சரவை அமைவதில் இழுபறி நீடிப்பதால் கொரோனா காலத்தில் துறைரீதியான பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி வென்றது. மாநில முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7-ல் பதவியேற்றார். தேர்தலில் வென்று 40 நாட்களாகியும், முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதத்தை கடந்தும் அமைச்சர்கள் பதவியேற்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்ற தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில் அமைச்சரவை அமைந்து பணிகள் மும்முரமாக இருக்கும் சூழலில் புதுச்சேரியிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.
அமைச்சரவையில் எத்தனை இடங்கள் என்பதில் தொடங்கி, தொடக்கம் முதலே கடும் சிக்கல் நீடிக்கிறது. இறுதியில் பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் பதவிகள் தர ரங்கசாமி சம்மதித்தார். இதைத்தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரப்பூர்வ கடிதத்தை கட்சித் தலைமை அனுமதி பெற்று அனுப்புவதாக பாஜக மேலிட பொறுப்பாளர் ராஜீவ்சந்திரசேகர் எம்பி தெரிவித்திருந்தார். ஆனால் அதிகாரப்பூர்வ பட்டியலை பாஜக மேலிடம் தரவில்லை. என்ஆர் காங்கிரஸில் யாருக்கு அமைச்சர் பதவி தரலாம் என முதல்வர் ரங்கசாமி இன்னும் முடிவு செய்ததாக தெரியவில்லை. அமாவாசை முடிந்து வளர்பிறையில் வரும் 14-ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் பதவியேற்பு விழா நடக்கும் என்று எதிர்பார்த்து, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ளஎன்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் காத்திருந்தனர்.
ஆனால் அமைச்சரவை அமைய பாஜக மேலிடத்திலிருந்து அதிகாரப்பூர்வ பட்டியல் வராததும், என்ஆர் காங்கிரஸ் தரப்பில் முடிவு ஏதும் எடுக்கப்படாததும் எம்எல்ஏக்கள் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை பதவியேற்பு நடத்துவதற்கான ஏற்பாடு ஏதும் நடப்பதற்கான அறிகுறியே இல்லை என்றும் புலம்புகின்றனர். இந்த விஷயத்தில் ஆளுங்கட்சி கூட்டணி தரப்பினரே விமர்சனத்தை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகி 40 நாட்களை கடந்த பிறகும் அமைச்சரவை அமையாததால் அரசு நிர்வாகம் தேக்கமடைந்து, துறைரீதியான பல பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பே முடிவு எடுக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சியே தொடர்கிறதோ! என்ற எண்ணம் நிலவுகிறது என்றும் பலர் கூறுகின்றனர். புதுச்சேரி அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருந்தாலும் சட்டப்பேரவைக்கு வரும் முதல்வர் ரங்கசாமியோ, செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து தொடர்ந்து மவுன விரதத்தையே கடைபிடிக்கிறார் பலன் கிடைக்குமா என்பது விரைவில் தெரியும்.
பாஜக செயல்பாடு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்ப்பை தான் அதிகரித்து வருகிறது. ரங்கசாமி ஆதரவு இல்லாமல் ஒரு இடங்களை கூட அவர்களால் வென்று இருக்க முடியாது. ஆனால் தற்போது பதவிக்காக ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுப்பது பாஜக மீது மக்களுக்கு வெறுப்புணர்வையே ஏற்படுத்துகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் புதுச்சேரியில் பாஜகவால் வளர முடியாது. மேலும் வரும் காலங்களில் இதே போன்ற சூழலை பாஜக கையாளுமென்றால் இந்த கூட்டணி பிரிவதற்கு வாய்ப்புள்ளது. பாஜக மற்ற மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை வாபஸ் பெற வைத்து ஆட்சியை கைப்பற்றியது போல புதுச்சேரியில் செய்ய முடியாது. பாஜக மீது மக்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்பலை நிலவி வருகின்றதால், ரங்கசாமிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக அதிகாரத்திலுள்ள பதவி மற்றும் முக்கிய இலாகாவை கைப்பற்றுவதில் குறியாக இருக்கின்றனர்.
ஆட்சியை கவிழ்த்தால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது பாஜகவிற்கு தெரியும். அதன் காரணமாகவே அதிகாரத்தை கைப்பற்ற பாஜகவினர் துடிக்கின்றனர். அதன் காரணமாகவே தற்போது பேச்சுவார்த்தை இழுபறி ஏற்பட்டு காலதாமதமாகிறது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே குழப்பம் நீடித்து வந்த காரணத்தால், அமைச்சரவை பொறுப்பேற்பதில் காலதாமதமாகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று உள்ள சூழ்நிலையில் ஆட்சியாளர்கள் அலட்சியத்தால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மாற்று கட்சிகளும், சமூக செயல்பாட்டாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டு கால காங்கிரஸ் - திமுக ஆட்சியில் ஆட்சியாளர் ஆளுநருக்கு இடையே நிலவி வந்த அதிகார மோதல் போக்கு காரணமாக பல துறைகள் சார்ந்த பணிகள் செயல்படுத்த முடியாமல் போனது. இதனால் பொது மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்கள் பணிகளை விரைந்து செயல்படுத்தும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், பதவி மற்றும் முக்கிய இலாகாவை கைப்பற்றுவதில் இந்த அரசு குறியாக இருந்ததால், இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசியல் செய்வது முறையானது அல்ல, இந்த நேரத்தில் யார் இறங்கி வேலை செய்கிறார்களோ அவர்களே மக்கள் தலைவராக உருவெடுக்க முடியும் என்கின்றனர்.