Watch Video: தன்னுடைய பேனரை தானே தூக்கி எறிந்த அண்ணாமலை..! மகளிர் தின விழா மேடையில் நடந்தது என்ன?
மேடையில் பேசுவதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மைக்கின் முன்னே அண்ணாமலையின் பேனர் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்த அவர், தன்னுடைய பேனரை தானே அகற்றி எறிந்தார்.
ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8ஆம் தேதி அன்று "சர்வதேச மகளிர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும், சர்வதேச மகளிர் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
தன்னுடைய பேனரை தானே அகற்றிய அண்ணாமலை:
ஆனால், அங்கு, மேடையில் அண்ணாமலை செய்த காரியம் அனைவரையும் வியக்கவைத்தது. மேடையில் பேசுவதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மைக்கின் முன்னே அண்ணாமலையின் பேனர் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்த அவர், தன்னுடைய பேனரை தானே அகற்றி எறிந்தார்.
இதனால், அங்கு கூடியிருந்த அனைவரும் குழம்பி போனார்கள். இச்சூழலில், தன்னுடையே பேனரை தானே அகற்றியதற்கு காரணம் என்ன என விளக்கம் அளித்த அவர், "பெண்களை கொண்டாடும் நிகழ்ச்சியில் ஆண் என்பதால் எனது புகைப்படத்தை தூக்கி எறிந்தேன்" என்றார்.
பெண்களை கொண்டாடும் நிகழ்ச்சியில் ஆண் என்பதால் எனது புகைப்படத்தை தூக்கி எறிந்தேன் என அண்ணாமலை விளக்கம்!#Annamalai #coimbatore #BJP @abpnadu pic.twitter.com/P2YNoV4qoI
— Noble Reegan J (@ReeganJNR) March 8, 2023
அண்ணாமலை மீது தொடரும் அதிருப்தி:
சமீபகாலமாக, தமிழ்நாடு பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன் காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (IT Wing) பிரிவின் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின் அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மேலும் பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். இன்று சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் நிர்வாகிகள் 13 பேர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர். பாஜக ஐடி விங் மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு தலைமையில் 13 நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளனர்.
விளக்கம்:
இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் விலகிய அனைவரும் பாஜக மாநில தலைமை மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்து விலகி இருப்பதுதான். முன்னதாக, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், "ஒரு கட்சியில் உள்ளவர்கள் மற்றொரு கட்சிக்கு செல்வது நல்லது தானே. அப்போது தான் மற்றவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிடக் கட்சிகள் உள்ளன.
தமிழ்நாட்டிற்கு நான் தோசை இட்லி சுட வரவில்லை, நான் எடுக்கும் முடிவுக்கு பாஜக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் தலைவர் தான்" என்றார்.