பொதுக்குழு பரபரப்பு அடங்குவதற்குள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸை அண்ணாமலை சந்தித்தது ஏன்..? பரபரப்பு பின்னணி தகவல்கள்..
அ.தி.மு.க. பொதுக்குழு பரபரப்பு அடங்குவதற்குள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணணாமலை, பொறுப்பாளர் சி.டி.ரவி இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்., சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பொதுக்குழுவின் தீர்மானத்தை ஏற்க மறுத்ததால் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அ.தி.மு.க. அவைத்தலைவர் தேர்வு செல்லாது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சற்றுமுன் பேட்டி அளித்தார்.
இந்த நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரான சி.டி.ரவியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரான திரௌபதி முர்முவிற்கு ஆதரவளிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது மட்டுமே பேசப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் மோதல் குறித்து அண்ணாமலை கூறும்போது, அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் உட்கட்சி பூசல் விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. தலையிடாது என்று திட்டவட்டமாக கூறினார். அதேசமயத்தில், 30 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பொதுக்குழு விவகாரம் குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு நிறைவு பெற்ற பிறகு, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலையும், சி.டி.ரவியும் நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போதும் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்லில் பா.ஜ.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், டெல்லியில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் வேட்புமனுத்தாக்கலின்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் நேரில் வந்து ஆதரவு அளிக்குமாறு அண்ணாமலையும், சி.டி.ரவியும் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சர்ச்சைக்குரிய வகையில் முடிந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளான அண்ணாமலையும், சி.டி.ரவியும் நேருக்கு நேர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை, சி.டி.ரவியின் அழைப்பை ஏற்று ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : OPS Lunch: பொதுக்குழுவில் இருந்து வெளியேறி, நேராக சாப்பிடச் சென்ற ஓபிஎஸ்.. பேசப்பட்ட ஹோட்டல்..
மேலும் படிக்க : EPS Tension: கொஞ்சம் பொறுங்க... அதிமுக பொதுக்குழு மேடையில் இபிஎஸ்ஸை டென்ஷனாக்கிய ஆதரவாளர்கள்...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்