கூட்டணிக்கு மீண்டும் வாங்க.. ஓபிஎஸ், தினகரனுக்கு அண்ணாமலை வேண்டுகோள்
அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகிய தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கூட்டணியில் இணை வேண்டும் என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சியாக உள்ள திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தினகரன் விலகல்:
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளனர். பாஜக கூட்டணியில் தமாக, அமமுக, ஓ.பன்னீர்செல்வம் இடம்பெற்றிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த சூழலில், நேற்று முன்தினம் அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தினகரனிடம் பேசிய அண்ணாமலை:
இந்த நிலையில், தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, டிடிவியிடம் நான் பேசினேன். அவர் ஒரு மிக முக்கியமான தலைவர். 2024ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியமான தலைவராக இருந்தவர்.
தமிழக அரசியலில் நீண்ட நெடிய பயணத்தை பார்த்தவர். அதே நேரத்தில் பிரச்சினைகளையும் சந்தித்தவர். அரசியலில் நிலைத்து நிற்பவர். அண்ணனிடம் தொலைபேசி மூலமாக வேண்டுகோள் விடுத்தேன். அவர்களின் முடிவை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பரிசீலனை:
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என்பது மக்களுக்கு நல்ல வித்தியாசமான தொலைநோக்கு பார்வை கொண்ட சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சியைத் தர வேண்டும். அதனால், நீங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டிடிவியிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன். அண்ணன் பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
தேவையில்லாத சில விஷயங்களை நாம் குழப்பிக்கொள்ள வேண்டாம். தேசிய ஜனநாயக கூட்டணி விரிவுபடுத்தப்பட்டபோது எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா தெள்ளத் தெளிவாக உங்கள் முன்பு சொன்னார். அதன்பிறகு அமித்ஷாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு ஏராளமாக நேரம் கொடுத்து வருகிறார். அமித்ஷா 2026ல் தமிழ்நாட்டில் மாற்றம் வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
முடிவை மாத்துங்க:
தேசிய ஜனநாயக கட்சியின் ஆட்சி இங்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதனால், தேவையில்லாத குழப்பம் வேண்டாம். தமிழ்நாட்டில் நிச்சயம் மாற்றம் நடக்கும். அதேசமயத்தில் தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களின் முடிவுகளை மறுபரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
காரணம் 2024ல் அவர்களின் நடவடிக்கை. டிடிவி எந்த சீட்டும் வேண்டாம் என்று கூட்டணிக்கு வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாதாரண அரசியல்வாதி கிடையாது. ஒரு தேர்தலில் சின்னம் இல்லாமல் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் யார் போட்டியிட்டு உள்ளனர். எனக்குத் தெரிந்து இந்திய அரசியலில் யாரும் இல்லை.
பிரதமர் மோடி மீது உள்ள அன்பிற்காக ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டார். பெரிய உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள் நிச்சயமாக பரிசீலனை செய்வார்கள். வேறு வேறு வியூகங்களுக்கு நாங்கள் இடம்கொடுத்து பதில் சொன்னால் நன்றாக இருக்காது.
திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்:
தினகரனின் கருத்துக்கு நான் பதில் சொன்னால் சரியாக இருக்காது. ஜிகே வாசன் டிடிவி தினகரனிடம் தொலைபேசியில் பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. அனைவரும் வேலையாக செய்கிறார்கள். சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் அது களையப்படும். தொலைநோக்குப் பார்வையுடன் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.





















