TN Assembly Election 2026 : ஆப்ரேஷன் கொங்கு : ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக! எஸ்.பி. வேலுமணி அப்செட்?
TN Assembly Election 2026 : கோவை மாவட்டத்தில் 3 தொகுதியில் போட்டியிட பாஜக திட்டம். குறிப்பாக சிட்டிங் எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசனின் தொகுதியான கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய 3 தொகுதிகளை கேட்க பாஜக தயாராகி வருகிறது..

"ஆப்ரேஷன் கொங்கு மண்டலம் ; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக ; அப்செட்டில் எஸ்.பி. வேலுமணி?’
சட்டப்பேரவை தேர்தல் 2026:
சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 5 மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக களமாடி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி பார்த்தால் ஆளும் கட்சியான திமுக தலைமையில் ஒரு அணியாகவும், எதிர்கட்சியான அதிமுக தலைமையில் ஒரு அணியாகவும், சீமான், விஜய் ஆகியோர் தனித்தும் களத்தில் இருக்கின்றனர். எனவே, 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி நிலவும் என சொல்லப்படுகிறது.
கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் கட்சிகள்:
செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு கொங்கு மண்டலம் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. அதேபோல பாஜகவும் கொங்கு மண்டத்தில் தீவிரமாக களமாடி வருகிறது. மற்றோரு புறம் ஆளும் கட்சியான திமுகவும் செந்தில்பாலாஜி மூலம் கொங்கு மண்டலத்தை குறிவைத்துள்ளது. சமீபத்தில் கோவை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட நான் அதிக முறை விசிட் அடித்த மாவட்டமாக கோவை இருக்கிறது என்று சொல்லி, கோவையின் முக்கியத்துவத்தை அதிகரித்தார்.

அதேபோல பிரதமர் மோடியும் கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ல் கலந்து கொண்டார். இந்த வருகைக்கு பிறகு பாஜகவின் மூத்த தலைவர்கள் தொகுதி வாரியாக களத்திற்கு சென்று பணியாற்றி வருகின்றனர். காரணம் இந்த முறை கோவையில் அதிக தொகுதியில் போட்டியிட பாஜக திட்டம் போட்டு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
ஆப்ரேஷன் கொங்கு மண்டலம்:
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வைத்து போட்டி போட்டது. இதில் கொங்கு மண்டலத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது பாஜக. இந்த நிலையில் 2026 தேர்தலில் கொங்கு பகுதியில் குறைந்தது 12 இடங்களில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் 2024 மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உடைந்து தனித் தனியாக போட்டியிட்டது. அந்த தேர்தலில் கோவையில் திமுக வெற்றி பெற்றது. பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுகவுக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது. இதனால் இந்த முறை எங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்த தயாராகிவருகின்றனர்.
மேலும் கோவை மாவட்டத்தில் 3 தொகுதியில் போட்டியிட பாஜக திட்டமிட்டிருப்பதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிட்டிங் எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசனின் தொகுதியான கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய 3 தொகுதிகளை கேட்க பாஜக தயாராகி வருகிறது..
துணை குடியரசுத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சொந்த தொகுதி கிணத்துக்கடவு என்பதால் அதனை கேட்டு பெறுவதில் பாஜக உறுதியாக உள்ளது.. இதற்கு ஆப்ரேஷன் கொங்கு என்று பாஜக பெயர்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்.பி. வேலுமணி அப்செட்:
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன்னுடைய தலைமையில் வென்று காட்டினார். இந்த முறை கோவையிலும் அதே நேரத்தில் ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் பாஜக கூடுதல் தொகுதிகள் கேட்கவுள்ள விவரம் தெரிந்து எஸ்.பி. வேலுமணி கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், மற்ற மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கினாலும் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 2 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கக் கூடாது என்பதில் எஸ்.பி. வேலுமணி உறுதியாக இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






















