எங்களையே விமர்சிப்பியா? சைபர் தாக்குதல்.. அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்!
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சிகள் ஆதிக்கத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக என்ற பாரம்பரியம் மிக்க கட்சிகளுடன் சேர்ந்து புதிய கட்சியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த அரசியல் களத்தில் போட்டியாக குதித்திருப்பதே ஆகும்.
சமூக வலைதளங்கள்:
இணையதள வளர்ச்சியின் எதிரொலி தொழில்துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானம் என பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது போல, அரசியலிலும் இணையதள வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் தலைமுறை வாக்காளர்கள், இணையளதத்தை பயன்படுத்துபவர்களையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கு தோதாக அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகிறது.
ஏனென்றால், தேர்தல் பரப்புரைக்கு சமூக வலைதளம் சிறந்த இடமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றனர். ஆனால், இதை அரசியல் கட்சிகள் வேறு கோணத்தில் கையாண்டு வருகின்றனர். அதாவது, சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது கட்சியின் கொள்கைககள், செயல்பாடுகள், நிலைப்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று நற்பெயர் பெற்றுக் காெள்வதற்கான முக்கியத்துவம் குறைவாக உள்ளது.
அவதூறும், விமர்சனங்களும்:
அதற்கு பதிலாக, தங்களது போட்டி கட்சி மீதான விமர்சனங்களையே அதிகளவில் கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளனர். சில சமயங்களில் அந்த கட்சிகள் மீது அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் சாதாரண பயனாளர்கள் போல பல ஆயிரக்கணக்கான கணக்குகளை அரசியல் கட்சிகள் சில உருவாக்கி வைத்துள்ளன.
அந்த கணக்குகள் மூலமாக, தங்களது கட்சிக்கு எதிராகவோ, தங்களது கட்சியை விமர்சித்தோ சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டால் அந்த பதிவிட்டவரை மிக கடுமையான விமர்சனம் செய்வதையே இந்த கணக்குகள் மூலம் வேலையாக வைத்துள்ளனர். சில சமயங்களில் இந்த கணக்குகள் மூலமாக தங்களுக்கு எதிராக கருத்துக்களையோ, செய்திகளையோ பதிவிடுபவர்களை தகாத வார்த்தைகளால் ஏளனமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
சைபர் மிரட்டல்:
இதுபோன்ற தொடர் விமர்சனங்களால் தங்கள் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட நெட்டிசன்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், நெட்டிசன்கள் பலரும் அதுபோன்ற எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆரோக்கிய அரசியலை பலரும் வலியுறுத்தி வந்தாலும், அதன் வளர்ச்சியை காட்டிலும் அவதூறு அரசியல் அந்த காலம் முதல் இருந்து கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கிறது. தற்போது அது சமூக வலைதளங்களிலும் உக்கிரமாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சி ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் தேர்தல் வரை தீவிரமாக இருப்பார்கள் என்று கூறலாம். அடுத்த 10 மாதங்களில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் எந்தளவு இருக்கிறதோ, அதைவிட பன்மடங்கு அதிகமாக தங்களது எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனங்களும், அவதூறுகளும், சரமாரி விமர்சனங்களும் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.






















