Ilangovan | எடப்பாடியின் தளபதி.. மாஸ்டர் மைண்ட்.. இபிஎஸ்.,யின் இதயம்... யார் இந்த இளங்கோவன்?
கோடநாடு விவகாரத்திலும் இணைத்து பேசப்படும் ஒருவர் என்ற வகையிலும் இளங்கோவன் வீட்டு ரெய்டு பல விஷயங்களை வெளிக்கொண்டு வரலாம் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் தினம் தினம் வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை என்ற செய்தியோடுதான் காலை விடிகிறது. ஆட்சி மாறிய நிலையில் இதெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக வட்டாரம் கூறினாலும், சோதனை செய்யப்படுவோர்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லாமல் இல்லை. அந்த வகையில் இன்று லஞ்சஒழிப்புத்துறையின் சோதனையில் சிக்கி இருக்கிறார் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க மாநிலத் தலைவர் இளங்கோவன்.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க மாநிலத் தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இளங்கோவன் உள்ளார். அதிமுகவின் ஜெ பேரவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார் இளங்கோவன்
தமிழ்நாடு அரசியலையும், முன்னால் ஆட்சி அமைத்திருந்த எடப்பாடி அரசையும் மேம்போக்காக கடந்து போனவர்களுக்கு இளங்கோவனைத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு தெரிந்த ஒருவர் தான் இளங்கோவன். ஏனென்றால் இவரைத் தான் எடப்பாடி பழனிசாமியின் தளபதி என்கிறது சேலம் அதிமுக வட்டாரம். அந்த அளவுக்கு பழனிசாமிக்கு நெருக்கமானவர். தேர்தல், அரசியல் நகர்வுகள் என அனைத்திலும் சத்தமில்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு உற்றதுணையாக இருந்தவர் தான் இந்த இளங்கோவன்.
வலதுகரம்..
எம்.எல்.ஏ., அமைச்சர் என இருந்த காலத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு வலதுகரமாக இருந்தவர் ஆத்தூர் இளங்கோவன் எனச் சொல்லப்படுகிறது. பழனிசாமியின் நம்பிக்கைக்கு உரிய நபர் என்பதால் அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் கலந்து ஆலோசிக்கப்படும் நபராகவே இருந்துள்ளார் இளங்கோவன். நிச்சயம் இளங்கோவன் மக்களவைத் தேர்தல் மூலமாக பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் சத்தமே இல்லாமல் 2019ம் ஆண்டு ஒரு பதவியில் சென்று அமர்ந்தார் இளங்கோவன். அதுதான் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க மாநிலத் தலைவர் பதவி. அது வெறும் பதவியாக அவருக்கு கொடுக்கப்படவில்லை. அது ஒரு தேர்தல் வியூகமாகவே அந்த பதவி கொடுக்கப்பட்டது எனக் கூறுகிறது சேலத்தின் அரசியல் வட்டாரம்.
மக்களை நெருங்கலாம்...
கூட்டுறவு சங்கங்கள் என்பது கடைகோடி வரை சென்று சேரக்கூடிய ஒன்று. இதன் மூலம் விவசாயிகள், பெண்கள், தொழில் முனைவோர் என யாரையும் எளிதில் சென்ற சேர முடியும் என்பதாலும், அவர்கள் தான் தேர்தலுக்கான அச்சாணி என்பதாலும் அந்த பகுதியை பலப்படுத்தும் முக்கிய அசைன்மெண்ட்டில் களம் இறக்கப்பட்டார் இளங்கோவன். பண விஷயத்தை கையாள்வதில் கைதேர்ந்த இளங்கோவன் இந்த அசைன்மெண்ட்டை தட்டி தூக்குவார் என்பதே எடப்பாடியின் கணக்காக இருந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே எம்.எல்.ஏ., எம்பி, என அனைத்துக்கும் வாய்ப்பிருந்தும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க மாநிலத் தலைவராக கைகாட்டப்பட்டார் இளங்கோவன்.
சுற்றும் சில தகவல்கள்...
தேர்தல், பணப்புழக்கம் என்ற பக்கத்தோடு நின்றுவிடவில்லை இளங்கோவனின் வாழ்க்கை. அதிமுகவை மிரள வைத்துக்கொண்டிருக்கும் கோடநாடு வழக்கிலும் அடிபடுகிறது இளங்கோவனின் பெயர். கோடநாட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் கடைசியில் சென்று சேர்ந்ததே இளங்கோவன் கைக்குத்தான் எனக் கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் விசாரிக்கப் படலாம் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக, பணமதிப்பிழப்பு சமயத்தில் சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி அசால்டாக 124 கோடியை மாற்றியவர் இளங்கோவன் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டுகளை வைத்த தொழிற்சங்கத்தினர் மொத்தமாக இளங்கோவனைத் தான் கைகாட்டினர்.
அந்த வகையில் முன்னாள் அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ இல்லையென்றால் முன்னால் ஆட்சிக்கும், முன்னாள் அமைச்சருக்கும் மிக நெருக்கமானவராகவே இருந்துள்ளார் இளங்கோவன். பணம் புழங்கிய கூட்டுறவு வங்கியின் தலைவர் என்ற ரீதியிலும், கோடநாடு விவகாரத்திலும் இணைத்து பேசப்படும் ஒருவர் என்ற வகையிலும் இளங்கோவன் வீட்டு ரெய்டு பல விஷயங்களை வெளிக்கொண்டு வரலாம் எனத் தெரிகிறது.