திருப்பூரில் நடக்கும் இந்திய கம்யூ., மாநில மாநாடு - தஞ்சையில் வழியனுப்பு விழா
திருப்பூரில் நடக்க உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதிநிதிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடந்தது.
திருப்பூரில் நடக்க உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதிநிதிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடந்தது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்திய நாட்டில் உழைக்கின்ற, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலை வாய்ப்பு, உணவு, நீர் உட்பட அன்றாட வாழ்விற்கான அத்தியாவசிய உரிமைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பாஜக ஆட்சியிலும் நாடு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது . தற்போது பாஜக அரசின் மதவாத நடவடிக்கைகளால், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளால் நாடு சிதறுண்டு கிடக்கிறது.
இந்நிலையில் மாற்றம் காண மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத பாஜக அரசுக்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 வது மாநில மாநாடு நாளை 6ம் தேதி முதல் 7 ,8 ,9 தேதி என நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
நாளை காலை 9.30 மணி அளவில் மாநாட்டுக் கொடியை மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு ஏற்றித் தொடக்கி வைக்கிறார். மாலை 4 மணி அளவில் நடைபெறும் சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டுக்கும் அவர் தலைமை வகிக்கிறார்.
நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா தொடக்கவுரையாற்றுகிறார். இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.என்.காதர் மொகிதீன், கொ.ம.தே.க.பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்த மாநாட்டின் 2வது நாளான ஞாயிற்றுக்கிழமை அறிக்கைகளின் மீதான விவாதமும், கருத்தரங்கமும் நடைபெறுகிறது. மாநாட்டின் 3வது நாளான திங்கள்கிழமை அறிக்கைகள் மீதான தொகுப்புரை, கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை, மாநிலக்குழு, கட்டுப்பாட்டுக்குழு தேர்வு, தீர்மானம் நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மாவட்ட பிரதிநிதிகள் இன்று மாலை தஞ்சாவூரில் இருந்து ஜனா சதாப்தி விரைவு ரயில் மூலம் புறப்பட்டனர். திருப்பூரில் நடைபெறும் மாநாடு வெற்றி பெறவும், பங்கேற்க செல்லும் பிரதிநிதிகளை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி தஞ்சை ரயிலடியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தில்லைவனம் தலைமை வகித்தார். மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் சந்திரகுமார், பாலசுந்தரம், கல்யாணசுந்தரம், சக்திவேல், பூபேஷ் குப்தா, செந்தில்குமார், ராஜாராமன், எஸ்தர்லீமா உட்பட 16 பேர் திருப்பூர் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த வழியனுப்பு நிகழ்ச்சியில் சிபிஐ மாநகர செயலாளர் பிரபாகர், ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மருத்துவர் சுதந்திர பாரதி, அரசு போக்குவரத்து சங்க பொருளாளர் தாமரைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்