Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன் அவதாரம்! ஆளுங்கட்சிக்கு அச்சுறுத்தலா? சூடுபிடிக்கும் அரசியல் களம்!
Jananayagan: தவெக தலைவர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படத்திற்கு ஜனநாயகன் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Jananayagan: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திரையுலகின் நம்பர் 1 நடிகராக உள்ளார். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அவர் கடந்தாண்டு அரசியல் களத்தில் நுழைந்தபோது, அரசியல் பயணத்திற்காக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஜனநாயகன்:
விஜய்யின் அரசியல் வருகை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் நடிப்பில் இருந்து விலகுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது கடைசி படத்தை எச்.வினோத் இயக்குகிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜனநாயகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் அரசியல் நடவடிக்கை மக்களாலும் அரசியல் கட்சிகளாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் திரைப்படம்:
சமூக கருத்துக்களை வணிக ரீதியாக ஆக்ஷன் படமாக சொல்வதில் கில்லாடியான எச்.வினோத், விஜய்யின் இந்த கடைசி படத்தை வலுவான திரைக்கதையுடன் அரசியல் கருத்துக்களுடன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் என்ற இந்த தலைப்பு விஜய்யின் அரசியல் வருகையையும், சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தாக்கத்தையும் வலுவாக பறைசாற்றும் விதமாக இருக்கும் என்று விஜய் ஆதரவாளர்களும், தவெக கட்சியினரும் கருதுகின்றனர். குடும்பங்கள் கொண்டாடும் நாயகன் என்ற பெயர் விஜய்க்கு ஏற்கனவே திரையுலகில் உள்ளது.
உற்றுநோக்கும் அரசியல் கட்சிகள்:
தமிழில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிகளவு குடும்ப ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய். இதுவே அவரது படங்கள் அதிகளவு வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவதற்கு காரணம். இந்த நிலையில் குடும்பங்களையும், மக்களையும் தன் பக்கம் இழுக்கும் விதமாக விஜய்யின் படத்திற்கு ஜனங்களின் நாயகன் என்று குறிப்பிடும் விதமாக ஜனநாயகன் என்று வைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் இந்த பெயர் ஆளுங்கட்சியான தி.மு.க., மத்தியில் ஆளும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இணையத்தில் விஜய்யின் ரசிகர்கள் ஜனநாயகன் என்ற பெயரை கொண்டாடி வருகின்றனர்.
படத்தின் தலைப்பே அரசியல் தாக்கத்துடன் இருக்கும் நிலையில், அடுத்தடுத்து வரும் டீசர்கள், பாடல்கள் கண்டிப்பாக அரசியல் கருத்து உள்ளடக்கியதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் செல்வாக்கை பன்மடங்கு உயர்த்தும் விதமாக ஜனநாயகன் உயர்த்தும் என்று தவெக-வினர் நம்பிக்கையுடன் உள்ளனர். ஜனநாயகனின் ஒவ்வொரு அறிவிப்பையும் அரசியல் கட்சியினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.



















