Annamalai New State Bjp President | பதவியேற்கும் அண்ணாமலை.. சாலை மார்க்கமாக பயணம் - பேரணி திட்டமா?
தமிழக பா.ஜ.க.தலைவராக அண்ணாமலை வரும் 16-ந் தேதி கமலாலயத்தில் பதவியேற்க உள்ளார். இதற்காக, அவர் நாளை கோவையில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு சாலை மார்க்கமாக சென்னை வந்தடைய உள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் எல்.முருகன். இவர் கடந்த மாதம் புதியதாக மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, அவர் வகித்து வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி காலியானது.
அந்த பதவிக்கு தமிழக பா.ஜ.க.வின் துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை நியமிப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். மேலும், இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக ஜே.பி.நட்டா அறிவித்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை வருகிற வெள்ளிக்கிழமை சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தலைவராக பொறுப்பு ஏற்க உள்ளார். இதுதொடர்பாக, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ அகில பாரத தலைவர் ஜே.பி.நட்டா அண்ணாமலை ஐ.பி.எஸ்.ஐ தமிழக பா.ஜ.க.வின் மாநில தலைவராக அறிவித்த செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.
மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் தொடங்கி சென்னை வரை சாலை வழியாக வருகை தர உள்ளார். வருகிற வழிகள் தோறும் ஆங்காங்கே மாநில தலைவருக்கு வரவேற்பு அளித்திட தாங்கள் ஏற்பாடுகள் செய்திட வேண்டும். உடனடியாக அந்தந்த மாவட்ட தலைவர்கள் அதற்கான ஏற்பாட்டு வரவேற்பு குழுக்களை அமைத்து சிறப்பான முறையில் வரவேற்பு தர வேண்டும்.
மாநில தலைவர் வரும் 16-ந் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கமலாலயத்தில் மாநில தலைவராக பொறுப்பு ஏற்க உள்ளார். இதில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன், முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அண்ணாமலையின் வருகை விவரமும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை காலை 9.30 மணியளவில் கோவையில் இருந்து புறப்படும் அண்ணாமலை கார் மூலமாக பல்லடம், திருப்பூர், பெருந்துறை, அவினாசி, ஈரோடு, சங்ககிரி, சேலம், ராசிபுரம் வழியாக இரவு குளித்தலை செல்கிறார். பின்னர் அங்கு இரவு தங்க உள்ளார். இதையடுத்து, அடுத்த நாள் காலை அங்கிருந்து புறப்பட்டு திருச்சி, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை வழியாக இரவு கூடுவாஞ்சேரி வர உள்ளார். பின்னர் 16-ந் தேதி காலை கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்பட்டு தாம்பரம், பல்லாவரம் வழியாக கமலாலயம் வர உள்ளார். வரும் வழியெங்கும் பா.ஜ,க, தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, விழா ஏற்பாட்டாளர்கள் குழுவையும் மாநில பா.ஜ.க. ஏற்பாடு செய்துள்ளது. மேலும், வரும் வழியில் தொண்டர்களையும் அண்ணாமலை சந்திக்க உள்ளார்.