கருணாநிதி சிலை இன்று எடுத்த முடிவா... வரலாறு சொல்லும் பெரியாரின் ஆசை!
கருணாநிதிக்கு சிலை திறக்க வேண்டும் என்பது முதலமைச்சர் ஸ்டாலின் ஆசையல்ல அது பெரியாரின் ஆசை...எப்படி தெரியுமா?
சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.க.தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் பேரவையில் முதல்வர் அறிவித்தார். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை வைக்கப்படும் என்று, தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீலமேகம் கேள்விக்கு முதல்வர் இவ்வாறு பதில் கூறினார். ஏற்கனவே அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்.,க்கு சிலைகள் இருக்கும் நிலையில், தற்போது கருணாநிதிக்கும் சிலை அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
’ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு அவர் இறப்பின் வரை ஏன் தமிழ்நாட்டில் ஒரு இடத்திலும் இதுவரை சிலையே இல்லை?’ என்கிற கேள்விக்குப் பின்னால் ’நெஞ்சைப் பிளக்கும்’ வரலாறு ஒன்று இருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணா இருந்த காலத்திலேயே கருணாநிதிக்கு சிலை வைக்கவேண்டும் என்று முதன்முதலாக அறிக்கை விட்டார் பெரியார். உயிருடன் இருந்தவருக்குச் சிலை வைப்பது என்பது அதுவரை காமராஜருக்கு மட்டும் நிகழ்ந்திருக்கிறது.பிறகு 1971ல் கருணாநிதிக்கு நிகழ்ந்த பாராட்டு விழா ஒன்றில், ‘செயற்கரிய சாதனை செய்தவருக்குச் சென்னை தலைநகரில் சிலை வைக்க வேண்டும்’ என மீண்டும் ஒருமுறைத் தனது ஆசையைத் தெரிவித்தார். கருணாநிதியோ முதலில் பெரியாருக்கு சிலை பிறகுதான் தனக்கு என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 1973 பெரியார் மறைந்தார். சென்னை அண்ணா சாலையில் பெரியாருக்கு சிலை வைத்தார் கருணாநிதி. சிலை திறப்பு நிகழ்வில் பேசிய மணியம்மை பெரியாருக்குச் சிலை வைத்த பிறகே தனக்குச் சிலை என்கிற கருணாநிதியின் வாக்குறுதியை அவருக்கு நினைவூட்டினார். திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலச் சிலை ஒன்று 21 செப்டம்பர் 1975ல் திறந்துவைக்கப்பட்டது. குன்றகுடி அடிகளார் திறந்து வைத்தார். 1987ல் எம்.ஜி.ஆரின் மறைவை அடுத்து கருணாநிதி மீது கோபம் கொண்ட எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் சிலர் அவரது சிலையைக் கடப்பாறை கொண்டு உடைத்தார்கள்.அந்தப் புகைப்படத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் வெளியிட்டிருந்தது.
அதனை முரசொலியில் வெளியிட்ட கருணாநிதி,
"உடன் பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை- நெஞ்சிலே
தான் குத்துகிறான்,
அதனால் நிம்மதி எனக்கு.
வாழ்க! வாழ்க!'',
என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அடுத்து, `கருணாநிதிக்கு மீண்டும் சிலை வைக்கலாம்' என திராவிடர் கழகம் கேட்டபோது அவர் விடாப்பிடியாக மறுத்துவிட்டார். பிறகு, அவரின் ஆட்சிக்காலத்தில், அவருடைய சிலை இருந்த அந்த பீடத்தையும் நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். அதன்பிறகு கருணாநிதிக்குச் சிலைவைக்கும் எண்ணமே யாருக்கும் எழவில்லை. இதற்கிடையேதான் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ந்தேதி மறைந்தார்.அவர் மறைவுக்குப் பிறகு அறிவாலயத்தில் அவருக்கான சிலை வைக்கப்பட்டது. இருந்தும் சென்னையில் பொதுவெளியில் கருணாநிதிக்கான சிலை என்ற பெரியாரின் ஆசை நிராசையாகவே இருந்து வந்தது. அண்மையில் கருணாநிதிக்கான நினைவிடம் அமைப்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், பேரவை 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையேதான் கருணாநிதிக்கான சிலை அறிவிப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.