Jayakumar: 'பா.ஜ.க. அடக்கி வாசிப்பதே நல்லது; இல்லையென்றால்...' - பகிரங்க எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க. அடக்கி வாசிப்பதே அவர்களுக்கு நல்லது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் அ,தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது,
“ தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி உள்ளது. அதில் பா.ஜ.க. உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருக்கும் என எங்களது பொது செயலாளர் கூறியுள்ளார். அதனை அமித்ஷாவும் உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு வேறு கர்நாடகா வேறு. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.
பாதிப்பு கிடையாது:
கர்நாடகாவில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் இடையே எந்தவித பாதிப்பும் கிடையாது. ஏற்கனவே கர்நாடகாவில் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு செய்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியில் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி. கண்டிப்பாக அந்த இடத்தில் வெற்றி பெறுவோம்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும். ஒரு சித்தாந்தம் இருக்கும். சித்தாந்தம் ரீதியிலும் சரி, கொள்கை ரீதியிலும் சரி, பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க. வேறுபடுகிறது. ஆனால் கூட்டணியில் உள்ளது. கூட்டணியை பொறுத்தவரை சித்தாந்தத்திற்கும் கொள்கைக்கும் சம்பந்தம் கிடையாது. காங்கிரஸ் கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் சேர மாட்டோம் என்று கூறினார்கள். ஆனால், தற்போது கூட்டணியில் உள்ளார்கள்.
அடக்கி வாசிப்பது நல்லது:
அதேபோல கூடா நட்பு கேடாய் முடியும் என கலைஞர் கூறினார். காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று கூறினார். தற்போது கூட்டணியில் தான் உள்ளார்கள். அது வேறு இது வேறு. நோன்பு திறப்பு நிகழ்ச்சி என்பது தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஜெயலலிதா காலத்தில் இருந்து இது நடைமுறையில் உள்ளது. இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது.
பா.ஜ.க.வை பொறுத்தவரை அடக்கி வாசிப்பது நல்லது. அவர்களுக்கு வரும் தேர்தலுக்கு அது நல்ல விஷயமாக இருக்கும். அடக்கி வாசிக்கவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் அது குறித்து அவர்களுக்கு புரியும். அம்மா உணவகங்கள் லாப நோக்கத்தோடு செயல்படாமல் சேவை மனப்பான்மையோடு அரசு செயல்பட வேண்டும். இதில் லாப நஷ்ட கணக்கை பார்க்க கூடாது”
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்று வந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க. தரப்பில் இருந்து வெளியாகும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அண்ணாமலையின் கருத்துக்களுக்கு கடந்த வாரம் அ.தி.மு.க. தலைவர்களும் விமர்சனங்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடும் புலிகேசிநகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக அன்பரசன் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ”இன்று பில்கிஸ்; நாளை யாரா வேணா இருக்கலாம்; எந்த விதியை கடைபிடிச்சீங்க?” - மத்திய அரசை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்..!
மேலும் படிக்க: TN Assembly: மீனவர்களுக்காக அதிமுகவுடன் கைகோர்த்த விசிக: பேரவையில் உறுதியளித்த அமைச்சர் மா.சு!