CM Stalin: பதிலின்றி மணிக்கணக்கில் பேசும் மோடி..! தண்ணி இருந்தா தாமரை மலருமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தண்ணீர் இருந்தால் மட்டும் தாமரை மலர்ந்து விடுமா? என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்களில் ஒருவன் பதில்கள் வீடியோ:
உங்களில் ஒருவன் பதில்கள் எனும் தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பதிலுரை பற்றி உங்கள் கருத்து என்னவென கேள்வி எழுப்பப்பட்டது.
சிறைத் தனிமையைப் போக்கி, குற்றம் செய்தோரையும் நல்வழிப்படுத்தும் புத்தகங்களைச் சிறைவாசிகளுக்கு வழங்கிய பெரியவர் பாலகிருஷ்ணன் போன்றோர் நம் உறவுகளில் பெருக வேண்டும்! #UngalilOruvanAnswers https://t.co/GeXy27UGXb
— M.K.Stalin (@mkstalin) February 14, 2023
பதில் கூறாமல் மணிக்கணக்கில் பேசும் மோடி:
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “ யார் கேட்ட கேள்விகளுக்கும் பதில் கூறாமல், மணிக்கணக்கில் எப்படி பேச வேண்டும் என்பதை பிரதமர் மோடியை பார்த்து தெரிந்து கொண்டேன். பாஜக ஆட்சி மீதும், பிரதமர் மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அவை எதற்குமே பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை. நாட்டு மக்கள் எனக்கு கவசமாக இருக்கின்றனர் என மக்கள் சொல்லவில்லை, அவரே சொல்லிக்கொள்கிறார்.
”தாமரை மலராது”
சேறு வீசுங்கள் தாமரை மலரும் என பிரதமர் மோடி கூறி இருக்கிறார். நீர்நிலைகளில் மலரும் பூ தான் தாமரை. அதுக்காக தண்ணீர் உள்ள எல்லா இடங்களிலும் தாமரை மலர்வதில்லை. சேறு இருக்கும் இடம் எல்லாமும் தாமரை மலர்ந்திடாது. இப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்கள் மட்டும் தான், பிரதமர் மோடியின் உரையில் இருந்ததே தவிர, பிபிசி ஆவணப்படம் குறித்தோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் விளக்கமளிக்கவில்லை.
”பிரதமரிடம் ஒன்றும் இல்லை”
நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றி இருக்கிறோம் என பிரதமர் மோடி வரிசைப்படுத்தவில்லை. சேது சமுத்திர திட்டம், நீட், மாநில உரிமைகள், ஆளுநரின் தலையீடுகள், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது என எத்தனையோ கேள்விகளை நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்பினர். அதற்கும் பிரதமர் உரையில் பதில் இல்லை. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு சொல்ல பிரதமரிடம் எதுவுமே இல்லை.
மோடிக்கு பதிலடி:
பாஜக ஆட்சியை கவிழ்த்த அதிமுக உடன் கூட்டணி வைத்திருக்கும் பிரதமர் மோடி, காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்து இருப்பது குறித்து கேட்கலாமா?, தமிழ்நாட்டிற்காக மத்திய அரசு அறிவித்த ஒரே திட்டம் மதுரை எய்ம்ஸ் மட்டும் தான். அதைகட்டுவதற்கே ஜப்பான் நாட்டின் நிதியுதவியை நாடியுள்ளது. அவர்கள் தான் நிதி கொடுக்கவில்லை. ஒன்றிய அரசாவது நிதியை ஒதுக்கியுள்ளதா? என்றால் அதுவும் இல்லை” என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.