பிரதமர் வெளியே வரக்கூட அனுமதி வாங்கணுமா? திமுகவுக்கு 72 மணி நேரம் கெடு! அண்ணாமலை பரபர பேட்டி!
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிட்டு பா.ஜ.க. போராட்டம் நடத்தும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
மத்திய அரசு நேற்று பெட்ரோல் மீது ரூபாய் 8ம், டீசல் மீது ரூபாய் 6ம் கலால் வரியை குறைத்துள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் பெட்ரோல் ரூபாய் 9.50ம், டீசல் விலை ரூபாய் 7ம் குறைந்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
“ ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும்கூட, பிரதமர் மோடி விலையை குறைத்து இருக்கிறார். தி.மு.க. அரசு செயல்தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கயைில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்போம் என்று கூறியுள்ளது.
72 மணி நேரத்திற்கள் கொடுத்த வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலையை ரூபாய் 5 குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை ரூபாய் 100 குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கோட்டையை முற்றுகையிட்டு பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபடும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மன்மோகன்சிங் ஒவ்வொரு முறையும் அனைத்து மாநில முதல்வர்களையும் கேட்டுதான் பெட்ரோல் விலையை ஏற்றினாரா? இறக்கினாரா? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்வதைப் பார்க்கும்போது பிரதமர் மோடி அலுவலகத்தை விட்டு வெளியே வர வேண்டுமென்றால் கூட அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும்.
காலையில், ராஜீவ்காந்தி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். மாலையில் அவரது இறப்புக்கு காரணமானவர்களை விடுவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்கள். முதல்வர் வடிவேலு போல செயல்படுகிறார். பேரறிவாளனை முதல்வர் கட்டித்தழுவி வரவேற்றதால் இந்தியாவே அதிர்ச்சியில் இருக்கிறது. இதுபோன்று முதல்வர் நடந்து கொள்வதால்தான் தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளை மத்திய அரசு விடுவிக்காதது, பேரறிவாளன் வழக்கில் கொடுத்த தீர்ப்பு மற்றவர்களுக்கு பொருந்தாது என முதல்வர் தெரிந்துகொள்ள வேண்டும். பா.ஜ.க.வின் நிலைப்பாடு கச்சதீவை மீட்பதுதான். ஆனால், தி.மு.க., காங்கிரஸ் கச்சதீவு என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. நான் பல்லக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். மீண்டும் இடையூறு செய்தால் நானே தூக்குவேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்