"420 மலையாக இருக்கும் நபரால் தமிழ்நாட்டிற்கே கேடு.." தமிழக பா.ஜ.க. தலைமை மீது நிர்மல்குமார் சரமாரி குற்றச்சாட்டு..!
தமிழக பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ள நிர்மல்குமார் தமிழக பா.ஜ.க. தலைமை மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பா.ஜ,க,வினவ் முக்கிய தலைவர்களில் ஒருவர் நிர்மல்குமார். இவர் தமிழக பா.ஜ.க. ஐடி பிரிவின் தலைவராக பொறுப்பு வகிப்பவர். இந்த நிலையில், அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ளார். பா.ஜ.க.வில் இருந்து விலகிய அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
நிர்மல்குமார் ராஜினாமா:
அ.தி.மு.க.வில் இணைந்துள்ள அவர் தமிழக பா.ஜ.க. மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த ஒன்றரை ஆணடுகளாக பல நூறு முறை சிந்தித்து இன்று நான் பா.ஜ.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்தவரை பணியாற்றினேன். இன்று விடைபெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் தமிழக பா.ஜ.க. தொண்டர்களையும், கட்சியையும் செருப்பாக பயன்படுத்தியுள்ளதாகவும், சொந்த கட்சி நிர்வாகிகளையே வேவு பார்த்து ஆனந்தம் அடைகின்றனர் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதை அல்பத்தனம் என்று வேதனையுடன் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, கட்சியின் தொண்டர்கள்,கட்சி மட்டுமின்றி கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் தமிழக பா.ஜ.க. தலைமை வியாபாரமாக்குவதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். தொண்டர்களை மதிக்காத மனநலம் குன்றிய மனிதரை போல செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்கிறது என்று கூறியுள்ளார்.
420 மலை:
இது மட்டுமின்றி ஒரு அமைச்சருடன் கடும் சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்த அமைச்சரை வெளியில் வீர ஆவேசமாக பேசிவிட்டு திரைமறையில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு 420 மலையாக இருக்கும் நபரால் தமிழக பா.ஜ.க.விற்கே மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய கேடு என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைமை மற்றும் மலை போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருப்பதன் மூலம் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பதை உணர முடிகிறது. தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு இதுபோன்ற பல நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.