புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
2026 ஆம் ஆண்டு தேர்தலில் புதுச்சேரியை கைப்பற்ற விஜய் இப்போதே யூகங்களை அமைக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் தென் இந்திய திரையுலகை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தெரிந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ் திரையுலகின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சூழலில் தான், அதனை விட்டு முழுவதுமாக விலகி தனது அரசியல் பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
அதிரடியாக அரசியலுக்கு வந்த விஜய்
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்குவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு எனவும் விஜய் அறிவித்தார். அடுத்தடுத்து கட்சிக் கொடி, கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார். இந்நிலையில் தான், வரும் 27ம் தேதி தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாநாடு
நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.
இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் நாளை நடைபெற உள்ளது. சேலம் ஆத்தூரில் இந்த பயிலரங்கம் நடைபெற உள்ளது. த.வெ.க. மாநாட்டு குழுக்கள், தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் இந்த அரசியல் பயிலரங்கத்தில் பங்கேற்க உள்ளனர். நாளை காலை 9 மணிக்கு இந்த பயிலரங்கம் நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் பணிகள்
இந்த அரசியல் பயிலரங்கத்தில் எதிர்க்கட்சிகளை எவ்வாறு அணுக வேண்டும்? தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அரசியல் மாநாடுகள், த.வெ.க.வின் கொள்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த அரசியல் பயிலரங்கத்தில் மாநாட்டிற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இந்த அரசியல் மாநாட்டிற்கு பிறகு தீவிரம் அடையும் என்று அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியை குறி வைக்கிறாரா ?
அனைத்து திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக தோன்றிய பிறகு, அதிமுக தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு முன்பாகவே, புதுச்சேரி சட்டமன்ற பொது தேர்தலில் சந்தித்திருந்தது. இடைத்தேர்தல்களை அதிமுக சந்தித்திருந்தாலும் முதல் முறையாக அதிமுக சந்தித்த பொதுத்தேர்தலாக, 1974 இல் நடைபெற்ற பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தல் அமைந்திருந்தது. இந்த தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட அதிமுக 30 இடங்களில் 12 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த தேர்தலில் அதிமுக 27 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அதிமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது பாண்டிச்சேரியில் தான்.
ஆட்சியின் பொதுச் செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்பதால், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கம் இருந்து வருகிறது. அதன் மூலம் விஜய் மற்றும் ரங்கசாமி ஆகிய இருவரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பலமுறை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் வழியில்...
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டும் என இலக்காக வைத்து தமிழக வெற்றிக் கழகம் பயணித்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உடனடி வெற்றி என்பது விஜய்க்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால் வருகின்ற 26 தேர்தலில், பாண்டிச்சேரியில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என விஜய் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் புதுச்சேரியில் தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விஜய் முடிவு செய்திருப்பதாகவும், இதன்மூலம் புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியை கொண்டுவர முடியும் என விஜய் நம்புவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் தொகுதி வாரியாக மாநாட்டு பொறுப்பாளர் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவரை புதுச்சேரியில் போட்டியிட வைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. எம்ஜிஆர் வழியில் புதுச்சேரியை முதலில் கைப்பற்ற விஜய் கைப்பற்ற திட்டம் தீட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.