படுக்கையறை காட்சிகளை ஒளிபரப்பும் பிக்பாஸ்! கமலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வேல்முருகன்!
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது படுக்கை அறை காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதும், ஆபாச காட்சிகளை ஒளிபரப்பு செய்வதையும் விஜய் டிவி மாற்றி அமைக்க வேண்டும்.
சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது.
ஆளுநருக்கு கண்டனம்:
இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்றோர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரின் பெயரையே இல்லாமல் நோட்டீஸ் அடித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவும் தமிழக கவர்னர் ரவி, தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பி வருகிறார். குறிப்பாக புதிதாக துவங்க உள்ள பல்கலைக்கழகத்திற்கு கூட ஒப்புதல் வழங்காத ஆளுநராக அவர் உள்ளார். அவர் உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.
குஷ்பு நாவடக்க வேண்டும்:
பொழுதுபோக்குக்காக துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது படுக்கை அறை காட்சிகளை நேரடியாக ஒளிப்பரப்பு செய்வதும், ஆபாச காட்சிகளை ஒளிபரப்பு செய்வதையும் விஜய் டிவி மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகளை இந்நிகழ்ச்சி மற்றும் அதனை தொகுத்து வழங்கும் கமலும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் நடிகை குஷ்பு இலங்கையில் தவறான வரலாற்றை கூறி வருகிறார். நடிகை குஷ்பு நாவடக்கி பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போடப்பட்ட ஆறு விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. அது போல அருள் என்பவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒரு சில அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் முறையாக தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பன்னாட்டு நிறுவனங்களிடம் ஆட்சியாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஆட்சிக்கு அவபெயர் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது ஒப்புதல் அளிக்காத ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆளுநர் ரவி தமிழகத்தில் பேரலல் அரசை நடத்தி வருகிறார். ஆர்எஸ்எஸ் ரவி ஒரு நிமிடம் கூட தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்க தகுதி இல்லை. மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை இவை மூன்று சூலாயுதத்தை கொண்டு எதிர்கட்சிகளை பாஜக பழிவாங்குகிறது. இது நாடறிந்த செய்தி என்று கூறினார்.
மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைக்காக எங்கு வேண்டுமென்றாலும் போராடலாம் அவர்களின் நியாயமான போராட்டத்தின் தன்மை அறிந்து அரசு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.