“பொதுத் தேர்வு கூட்டாட்சிக் கொள்கையை நீட் தேர்வு மீறுகிறது”: தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஒற்றைச் சாளர பொதுத் தேர்வு கூட்டாட்சிக் கொள்கையை நீட் தேர்வு மீறுவதாகக் கூறி தமிழ்நாடு அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
நீட் தேர்வு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளிலும் சேர்க்கைக்கான மருத்துவ நுழைவுத் தேர்வாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 131வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநிலங்களின் சுயாட்சியைப் பறிப்பதால், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் கூட்டாட்சி கொள்கை நீட் போன்ற தேர்வுகளால் மீறப்படுவதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திர அரசு தமிழ்நாடு அரசிடம் ஏற்கெனவே விளக்கம் கேட்டிருந்தது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இம்மசோதாவானது ஆளுநரின் மூலம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
விளக்க கடிதம்:
அதனை தொடர்ந்து நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் மத்திய அரசு ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு விளக்கம் கேட்டது. அதற்கு தமிழ்நாடு அரசும் பதிலளித்திருந்தது.
தற்போது, மீண்டும் விளக்கம் கேட்டு ஆயுஷ் அமைச்சகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஓரிரு வாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.