BJP plan in Tamilnadu: அமைச்சராக எல்.முருகன்... தலைவராக அண்ணாமலை... போதாக்குறைக்கு கொங்கு நாடு; பா.ஜ.க., பிளான்தான் என்ன?
வாஜ்பாய் பீகாரிலிருந்து ஜார்க்கண்டைப் பிரித்தது போல தேவைப்பட்டால் தமிழ்நாட்டிலிருந்து கொங்கு மண்டலத்தைப் பிரிப்பதற்கும் இவர்கள் தயங்கமாட்டார்கள்.
அடுத்தடுத்து சர்ப்ரைஸான மாற்றங்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் அரங்கேறி வருகின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலில் நான்கு உறுப்பினர்களை தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு அனுப்பி அந்தக் கட்சியின் பலவருடக் காலக் காத்திருப்புக்கு களிம்பு பூசியுள்ள எல்.முருகனை கட்சி மேலிடம் டெல்லிக்கு அழைத்து அமைச்சராக்கிக் கொண்டது. மற்றொருபக்கம் அண்ணாமலையை தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக்கியுள்ளது.
ஆனால் இந்த புதுப்பொறுப்புகளோடு கொஞ்சம் பரபரப்பாக கொங்குநாடு பிரச்னை, நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு எனத் தொடர்ச்சியாகச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது அந்தக் கட்சி. தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா அசுரத்தனமாக வளரும். இன்னும் மூன்று மாதத்தில் பல மாற்றங்களை தமிழ்நாடு காணும். இதுவரை பாரதிய ஜனதாவுக்கு தமிழ்நாடு தேவைப்பட்டது. இனி தமிழ்நாட்டுக்கு பாரதிய ஜனதா தேவைப்படும் என பேசியுள்ளார். இது தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் நீண்டகால ப்ளானுக்கான முன்னோட்டமா? அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்.
பீகாரிலிருந்து ஜார்க்கண்ட் - தமிழ்நாட்டிலிருந்து கொங்கு நாடு!
‘பாரதிய ஜனதா கட்சியின் இந்த நடவடிக்கைகள் அதிமுகவுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கை. அதிமுகவின் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியைக் கூட்டணியில் வைத்திருக்கக் கூடாது என்னும் முடிவில் இருக்கிறார்கள். இந்தநிலையில் சசிகலாவைக் கட்சியிலிருந்து கழட்டிவிட்ட எடப்பாடி பழனிசாமி தங்கள் கட்சியையும் கூட்டணியிலிருந்து கழட்டிவிட வாய்ப்புள்ளது என பிரதமர் மோடியின் மைக்ரோ மேனேஜ்மெண்ட் டீம் அவரிடம் சொன்னதாகத் தெரிகிறது. பாராளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான கூட்டணிக்கு வெறும் 30 சதவிகித வாக்குகள் தான் கிடைத்தது. ஆனால் தனது தலைமையிலான கூட்டணிக்கு சட்டமன்றத் தேர்தலில் 40 சதவிகித வாக்குகள் கிடைத்தது என எடப்பாடி பழனிச்சாமி கூறிவருவதையும் பாரதிய ஜனதா கவனித்து வருகிறது.
இதையடுத்தே இங்கு கூட்டணி வைத்தே ஆகவேண்டும் என்கிற நிர்பந்தத்தில் மொழிவழிச் சிறுபான்மையினரிடையே பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வாக்கை வளர்க்கும் விதமாகக் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை அந்தக் கட்சி வலுப்படுத்தி வருகிறது.இதன் வழியாக மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் கொங்கு மண்டலத்தில் அவர்களை வலுவிழக்கச் செய்யமுடியும். இதனடிப்படையில்தான் பாரதிய ஜனதா தனது காய்களை நகர்த்துகிறது. இது நீண்டகாலத்துக்கான வியூகம்தான். வாஜ்பாய் பீகாரிலிருந்து ஜார்க்கண்டைப் பிரித்தது போல தேவைப்பட்டால் தமிழ்நாட்டிலிருந்து கொங்கு மண்டலத்தைப் பிரிப்பதற்கும் இவர்கள் தயங்கமாட்டார்கள். அதற்காகத்தான் தற்போது கொங்குநாடு கோரிக்கையும் வலுத்து வருகிறது.மேலெழுந்தவாரியாக ஒன்றியம் என்கிற திமுகவின் குரலுக்கு எதிராகக் கொங்குநாடு பிரச்னையை பாரதிய ஜனதா கையிலெடுத்துள்ளது. இது வலுப்படாத கோரிக்கைதான் ஆனால் அதிமுகவின் இரட்டை நிலைப்பாட்டினால் இந்தக் கோரிக்கை வலுப்பெற வாய்ப்புள்ளது.மற்றபடி தமிழ்த்தேசியத்துக்கான குரல்கள் இங்கு வலுவாக இருக்கும் அளவுக்கு இந்துத்துவ சக்திகளின் குரல் வலுவாக இல்லை. அவர்களின் வாக்கு சதவிகிதமும் ஒப்பீட்டளவில் குறைவுதான் அதனால் அண்ணாமலை சொல்வது போல ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பெல்லாம் இல்லை’ எனக் கூறியுள்ளார்.
Also Read: ‛வலிமை’ இன்னொரு அப்டேட்; இசை உரிமை குறித்து யுவன் வீடியோ வெளியானது!