`இனி வாக்காளர்களுக்கு மட்டுமே பதில் தருவேன்!’ - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பி.டி.ஆர்!
தன் மீதான தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேர்காணல் ஒன்றில் விமர்சனங்களுக்குப் பதில் தரப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.
தன் மீதான தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்திய எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆகியோரின் விமர்சனங்களுக்குப் பதில் தரப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.
`நான் அவர்கள் இருவரையும் முழுவதுமாகப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்போதில் இருந்து, எனது நேரத்திற்கு மதிப்பில்லாதோருக்குப் பதில் அளிப்பதைத் தவிர்ப்பது எனது கொள்கையாக மாறியிருக்கிறது. எனினும் வாக்காளர்களின் நேர்மையான விமர்சனங்களுக்குப் பதில் தருவதற்காக நிச்சயம் நேரம் வகுத்துக் கொள்வேன்’ எனப் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் தளத்தில் அண்ணாமலை முதலானோருடன் நிகழ்ந்த வாக்குவாதம் குறித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், `நான் கடந்த காலத்தைப் பேச விரும்பவில்லை. ஆனால் என் எதிர்காலம் பற்றி பேசுவேன். ஒரு நிதியமைச்சராக நான் செய்வதற்கு அவ்வளவு இருக்கிறது. ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பிற மாநில அதிகாரிகளுடன் பேசுவது, ஜி.எஸ்.டி கவுன்சில், சர்வதேச முதலீட்டாளர்கள் முதலானோருடன் உரையாடுவது என எனக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. அதனால் நான் யாருடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். ஏற்கனவே சில தொலைக்காட்சி சேனல்களிலும், விவாதங்களிலும் என்னைப் பற்றிய தவறான புரிதல்களும் கேள்விகளும் எழுந்துள்ளன’ எனவும் கூறியுள்ளார்.
`ஜெயகுமார், அண்ணாமலை ஆகிய இருவருக்கும் அரசியல் கூர்மையோ, மனிதம் குறித்த நோக்கமோ இல்லாமல், எனது கவனத்தை ஈர்த்து, நேரத்தை வீணாக்கி வருகிறார்கள். நான் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு, எளிய மக்களின் கேள்விகளுக்குப் பதில் தருவேன்’ என்று கூறியுள்ள பழனிவேல் தியாகராஜன், ஒரு அரசியல்வாதியின் மிகப்பெரிய கடமை என்பது அரசுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் கடினமானவற்றையும் எளிய வாக்காளர்களுக்குப் புரிய வைப்பது ஆகும் எனச் சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர், `டீக்கடை, பேருந்து நிலையங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றில் இருக்கும் எளிய மக்களும் அரசின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபட வேண்டும். இது வெற்றிகரமான ஜனநாயகத்தை உருவாக்கித் தரும்’ எனக் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன், அதிமுக தலைவர்கள் மீது திமுக முன்வைத்த விமர்சனங்களின் மீது ஏன் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், `எங்கள் நிலைப்பாடுகளை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை, அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளும் அமைச்சர்களும் மீளாய்வு செய்து, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிதி குறித்தவற்றை எனது துறை சரிபார்த்து வருகிறது. எங்கள் விசாரணையின் முடிவுகள் பின்வாங்கப்பட்டால், நானே நேரடியாக முதல்வரிடம் அதுகுறித்து பேசுவேன்’ என்று கூறிய அவர், திமுக எம்.பி ஒருவர் குறித்த அவரது ட்விட்டர் பதிவு குறித்து கேட்ட போது, `நான் கடந்த காலம் பற்றிப் பேசுவதில்லை’ என்று கூறி முடித்துக் கொண்டார்.