Tamil Nadu Coronavirus : ஆக்சிஜன் சிலிண்டர், ரெம்டெசிவிர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
தமிழகத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் டெரம்டெசிவர் மருந்துகளை விநியோகிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. தினசரி பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் உள்ளது. இந்த நிலையில், நாட்டின் பெரும்பாலான இடங்களில் காணப்படுவது போல தமிழகத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, டெரம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு போன்ற புகார்கள் சில இடங்களில் காணப்படுகிறது.
இதைத்தடுப்படுதற்கு மாநில அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை, தொழில்துறை இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி 32 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் தினசரி தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐ.சி.யு. படுக்கை வசதிகளின் தேவை ஆகியன அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் சேர நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில், தமிழகத்திற்கான ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக விநியோகிக்க வேண்டும். தமிழகத்திற்கான தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு 3 நாட்களில் சரி செய்யப்படும் என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.