டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு திரும்ப இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு குடியரசுத் தலைவரைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை திறப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கிடையில், தமிழ்நாடு திரும்ப இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனை சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க, சில முறை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் நடப்பாண்டில் நடைபெற இருக்கும் ஜி 20 மாநாடு தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் டெல்லி சென்று இருந்தார்.
அதன்பிறகு கடந்த 4 மாதங்களாக டெல்லி செல்லாமல் இருந்த ஸ்டாலின், நேற்று டெல்லி புறப்பட இருந்தார். ஆனால், அப்போது திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று காலையே சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். டெல்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி விமான நிலையத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்றனர்.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
இதனை அடுத்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். கிண்டியில் ரூ. 230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த புதிய பன்னோக்கு மருத்துவமனை சுமார் 51 ஆயிரத்து 429 சதுர கி.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 6 மாடிகளுடன் இந்த புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மக்கள் பலன் பெறும் வகையில் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் – இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை துறைகள் செயல்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 5ஆம் தேதி அன்று சென்னை கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும், பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் குடியரசுத் தலைவர் முர்முவிடம், முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து குடியரசு தலைவரிடம் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.