‛சசிகலா அதிமுகவிற்கு திரும்பலாம்... இங்கே எதையும் புறந்தள்ளிவிட முடியாது’ -பாஜக தலைவர் அண்ணாமலை!
திமுகவுக்கு செலக்டிவ் அம்னீஸியா ஏற்பட்டுள்ளது. அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன பேசினார்கள் என்பதை மட்டும் தோதாக மறந்துவிட்டார்கள்.
திமுகவுக்கு செலக்டிவ் அம்னீஸியா ஏற்பட்டுள்ளது. அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன பேசினார்கள் என்பதை மட்டும் தோதாக மறந்துவிட்டார்கள் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை.
அவருடைய பேட்டி வருமாறு:
திமுக ஆட்சியின் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னென்ன?
திமுகவுக்கு செலக்டிவ் அம்னீஸியா ஏற்பட்டுள்ளது. அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன பேசினார்கள் என்பதை மட்டும் தோதாக மறந்துவிட்டார்கள். இப்போது அங்கு ஊழல் பெருகத் தொடங்கியிருக்கிறது. மக்களும் திமுகவின் ஊழல் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். திமுகவினருக்கு மாநில நலனுக்கான புதிய திட்டங்களைத் தீட்டுவதற்கான மதி நுட்பம் இல்லை. அப்படியே தீட்டினாலும் அதற்கு செயற் வடிவம் கொடுக்கத் தெரியவில்லை. கடந்த 6 மாதங்களாக மாநில வளர்ச்சிக் கொள்கைகளை வகுப்பதில் ஒரு தொய்வை நான் காண்கிறேன்.
திமுகவின் 7 மாத ஆட்சி பற்றி உங்களின் மதிப்பீடு என்ன?
முதல் 6 மாதங்களுக்கு திமுகவை பெரிதாக விமர்சிக்கக் கூடாது என்றே இருந்தேன். அது சரியாகவும் இருக்காது. அவர்கள் ஆட்சி அமைத்து அதில் இயல்புக்கு வர வேண்டும். இப்போது 7வது மாதம் வந்துவிட்டது. ஆனால் இன்னமும் அவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை இல்லை. தமிழகம் உற்பத்தித் துறையில் பெரும் சக்தியாக இருக்க வேண்டுமா? இல்லை சேவைத்துறையில் சிறந்து விளங்க வேண்டுமா? அல்லது வேளாண்மையில் புரட்சிகளை செய்ய வேண்டுமா என்ற தொலைநோக்குப் பார்வை இல்லை. அமைச்சர்கள் அனைவரும் சொல்லி வைத்தார்போல் டெல்லி எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு கொள்கையில் மட்டுமே இருக்கின்றனர். மத்திய அரசு விரும்பிவந்தாலும் அவர்களுடன் இணக்கமாக செல்லும் போக்கு இல்லை. முதல்வர் கடினமாக வேலை செய்ய, அதிகம் பயணிக்க, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்ய முயற்சிக்கிறார். ஆனால் அவரது சகாக்கள் அவரை ஏமாற்றுகின்றனர்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே இருக்கும் பூசலைக் களைய நட்பு ரீதியாக ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?
பாஜக பல வகையிலும் முயற்சிக்கிறது. இங்கே சில தேசிய செயலாளர்கள், பொதுச் செயலாளர்கள் மாநிலப் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர். நாங்கள் அனைவருமே ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுக வலுவானதாக இருக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறோம். எப்போதுமே பாஜகவுடன் தோளோடு தோள் நிற்போம்.
அதிமுகவின் எதிர்காலத்தில் சசிகலாவின் தாக்கம் எப்படி இருக்கும்?
தமிழக அரசியல் வித்தியாசமானது. இங்கே எதையும் முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் ஒதுங்கியவர்கள் திரும்பி வரலாம். தமிழக கட்சிகள் தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டது. தொண்டர்கள் விருப்பமே இங்கு இறுதி. அதனால், இந்த விவகாரத்தில் நான் தனிப்பட்ட கருத்தினைத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், மாநில நலனுக்காக அதிமுகவின் அனைத்து நல் தலைவர்களும் ஒன்றிணைந்து கட்சியை வலுவாக வைக்க வேண்டும் என விரும்புகிறேன். தமிழக அரசியலில் அதிமுக ஒரு தூண். அது நொறுங்கிவிடக் கூடாது.
ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா இணைப்புக்கு பாஜக என்ன செய்கிறது?
இது என் பதவிக்கு மீறியது. இவற்றைச் செய்ய கட்சியில் வேறு சிலர் இருக்கின்றனர்.
பாமக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறதா இல்லையா?
இப்போதைக்கு பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறது. நாங்கள் நல்ல உறவைப் பேணிக் கொண்டிருக்கிறோம். 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்ற பெரிய விஷயத்தை நினைத்து பாமக அடுத்த நகர்வுகளை மேற்கொள்ளும் என நான் நம்புகிறேன். மற்றபடி ராமதாஸ், ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நான் மேலும் தோண்டித் துருவ விரும்பவில்லை.
எதிர்காலத்தில் திமுகவுடன் பாஜக கூட்டணி சேருமா?
பாஜகவும், திமுகவும் கொள்கை ரீதியாக இரு துருவங்கள். திமுகவின் பார்வையும், தமிழகம், இந்தியா மீதான எங்களின் பார்வையும் வெவ்வேறு. அதனால் இணைவதற்காக வாய்ப்புகள் உள்ளது என்று கூறமுடியாது.
காமராஜர் காலத்திற்குப் பின்னால், காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுமே தமிழகத்தில் வலு இழந்துவிட்டது என்று கூறலாமா?
1960, 1980களைப் போல் தனிநபருக்கான வரவேற்பைப் பொருத்து இன்று தமிழக அரசியல் களம் இல்லை. முன்பு ஒரு கட்சியில் ஓரிருவரை உருவாக்கி அவர்களை மட்டுமே மக்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்தினர். ஆனால் இது சமூக வலைதள காலம். இப்போது எல்லோரும் அடையாளம் பெறுகின்றனர். முகங்களைக் காட்டிலும் கொள்கைக்கே முக்கியத்துவம் உள்ளது. கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோருக்கு கொள்கையும் வலுவாக இருந்தது. தனிநபர் அடையாளமும் வலுவாக இருந்தது. பாஜகவுக்கு கொள்கைதா பிரதானம். அது தனிநபர் அடையாளங்களைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது. அந்தக் காலத்தில் காமராஜர் அவர் தொலைநோக்குப் பார்வையால், குணநலனால், மக்கள் அபிமானத்தை கட்சியைக் காட்டிலும் உயர்ந்து நின்றார். திமுக இன்று அது கொண்ட கொள்கையில் இருந்து விலகிவிட்டது. அதற்கென இப்போது கொள்கைகளே இல்லை.
ரஜினி அரசியலுக்கு வராதது தமிழக அரசியலுக்கு நட்டம் என்பீர்களா?
நிச்சயமாக. 100 சதவீத இழப்பு என்பேன். அவர் வித்தியாசமான் பார்வை கொண்டிருந்தார். அவருடைய இரண்டு உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பினார். அவரது ஆன்மீக அரசியல் கோட்பாடு புதுமையானது. அது அரசியலுக்கு புதிய மாண்பைக் கொடுத்திருக்கும்.
திமுக, அதிமுக. தமிழகத்தில் யாருடைய பிடி முதலில் தளரும் என நீங்கள் கணிக்கிறீர்கள்?
நீங்கள் வாக்கு வங்கியைப் பாருங்கள். திமுக 33.5% வாக்குகளைப் பெற்றுள்ளது. இது ஆளுங்கட்சியின் வாக்கு நிலவரம். அப்படியென்றால் 67% பேர் திமுக வேண்டாம் என நினைத்துள்ளனர். பாஜக அதிமுகவை சிதைக்க நினைக்கிறது என குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் யாரையும் சிதைக்காமல் பாஜகவால் வளர முடியும். திமுகவுக்கு வாக்களித்த 10% நடுநிலை வாக்காளர்கள் பாஜகவுக்கு வருவார்கள். ஆனால் அதற்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். எங்கள் மீதான பொய்ப் பிராச்சாரங்களை உடைக்க வேண்டும். வாக்குச்சாவடிகளை வலுப்படுத்த வேண்டும். 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி என்று மனதில் நான் குறித்து வைத்துள்ளேன். இதனால் அதிமுக வேதனையடையாதா எனக் கேட்கலாம். ஆனால் எல்லா கட்சிக்கும் ஆட்சி ஆசை இயல்பானது தானே.
சரி, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக நீங்கள் என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்?
நடந்து முடிந்த தேர்தலையே எடுத்துக் கொள்ளுங்கள். அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் 84,000 வாக்குகளை சராசரியாகப் பெற்றுள்ளது. பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்ட தொகுதிகளில் 62,000 வாக்குகளைப் பெற்றுள்ளோம். 20 தொகுதிகளிலும் நிலைமை இதுதான். எங்களின் வேட்பாளர்களில் பலரும் முதல் முறையாக அல்லது இரண்டாவது முறையாக களம் கண்டவர்கள். அதனால் பாஜகவுக்கு இது நல்ல ஆரம்பம். நாங்கள் பெறும் ஓட்டு எங்களின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. எங்களுக்கு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் 10 விருப்பமில்லாதவையே. இருந்தாலும் போட்டியிட்டோம். அதில் எங்களை நிரூபித்துள்ளோம். அதிமுகவுடன் தொகுதியில் பெரியளவில் பேரம் பேசவில்லை. ஏனெனில் கடந்த முறை ஈபிஎஸ், ஸ்டாலினுக்கு இடையேதான் போட்டி என்று உணர்ந்திருந்தோம். அதிமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நாங்களே விரும்பினோம்.