தமிழ் தாய் வாழ்த்து திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு இருக்கிறது - செல்வ பெருந்தகை கண்டனம்
தமிழ் தாய் வாழ்த்து திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளதாக , தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை கண்டனம்
இது குறித்து செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
தமிழக ஆளுநராக ஆர்.என். பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குலைக்கின்ற வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்ட மதச்சார்பின்மையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார்.
இதன் மூலம் , எந்த அரசமைப்புச் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாரோ, அதற்கு எதிராகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து கடுமையான கண்டனங்களை அனைத்து அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தினாலும், தொடர்ந்து திட்டமிட்டு தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் பேசி வருகிறார்.
DD தமிழ் அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்டம் நிறைவு நாள்
இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போது , விழா தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியவர்கள் திட்டமிட்டு தவிர்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு திராவிட நல் திருநாடு என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியிருக்கிறார்கள். இப்படி செய்வதன் மூலமாக தமிழக ஆளுநரை திருப்திபடுத்தலாம் என்ற நோக்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதை செய்திருப்பதாக தெரிகிறது. இந்த நடவடிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது. இத்தகைய போக்கை எவருமே சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
சமஸ்கிருத மொழிக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்
ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து பேசும் போது ‘தமிழ்நாட்டு மக்கள் இந்தியை விரும்பி படிக்கிறார்கள். இந்தியை எவரும் எதிர்க்கவில்லை” என்று பேசியதோடு, சமஸ்கிருத மொழிக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில், உறுப்பு 343 இல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மொழி இருப்பதோடு , ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாகவும் , மாற்று மொழியாகவும் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை தொடர்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ஜவஹர்லால் நேரு 1963 இல் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் ஆட்சி மொழிகள் சட்டம் - 1967 இல் திருத்தம் செய்யப்பட்டு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒருமொழி மற்ற மொழியை விட தேசியமானது என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசமைப்புச் சட்டம் 8-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள 14 மொழிகளுமே தேசிய மொழிகளாகும்.
இந்நிலையில், இந்தி மொழியை பரப்புவதற்காக இந்தி பேசாத மக்கள் வாழ்கிற தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒன்றிய அரசு நிகழ்ச்சியில் இந்தி மொழியை மட்டும் பரப்புகிற நிகழ்ச்சி நடத்துவதும், இந்தியை தமிழக மக்கள் படிக்க வேண்டுமென்று ஆளுநர் பேசுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது. மேலும், 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க முயற்சி நடக்கிறது என்று ஒரு ஆளுநரே பேசுவது தமிழக மக்களை இழிவுபடுத்துகிற செயலாகும். இத்தகைய பேச்சுகளின் மூலம் தமிழக மக்கள் ஏற்றுக் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் சீர்குலைக்கிற முயற்சியில் ஆளுநரே ஈடுபடுவது எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு விரோதமான இத்தகைய பேச்சுகளை தமிழக ஆளுநர் உடனே நிறுத்த வேண்டும். அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழக முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நான் வழிமொழிந்து வலியுறுத்துகிறேன்.