SC On Waqf Bill: மோடி அரசுக்கு சாட்டையடி - வக்பு வாரிய சட்டத்தின் அம்சங்களுக்கு தடை - உச்சநீதிமன்றம் அதிரடி
SC On Waqf Bill: மத்திய அரசின் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தின் சில அம்சங்களுக்கு தடை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SC On Waqf Bill: வக்பு வாரியத்தின் சொத்து என அறிவிக்கப்பட்டது, அரசாங்கத்தின் சொத்து என அங்கீகரிக்கும் உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் அதிரடி
மத்திய அரசின் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வக்பு திருத்தச் சட்டம் 2025 இல், ஒருவர் வக்பு ஒன்றை உருவாக்க 5 ஆண்டுகள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வக்பு (திருத்தம்) சட்டம், 2025 இன் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், சில பிரிவுகளுக்கு சில பாதுகாப்பு தேவை என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை
மேலும், வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை ஆட்சியருக்கு வழங்கும் வக்ஃப் சட்டத்தின் ஒரு விதியையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை தீர்ப்பளிக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது என்றும், இது அதிகாரப் பிரிவினையை மீறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், வக்பு கவுன்சிலில் மொத்தத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் நான்கு பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வக்பு திருத்தச் சட்டம்:
வக்பு அமைப்பின் கீழ் ஏற்படும் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், அதனை ஒழுங்குபடுத்தும் விதமாகவும் வக்பு திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இந்த சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படும் என இஸ்லாமியர்கள் கடுமையாக எதிர்த்தாலும், பெரும் அமளிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதையடுத்து சட்டத்தை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் தான், மேலும் சில அம்சங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மோடி அரசுக்கு சாட்டையடி?
கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றம் வெளியிட்டு வரும் அதிரடியான தீர்ப்புகள் பலவும், மத்திய அரசுக்கு எதிராகவே அமைந்தபடி உள்ளன. உதாரணமாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறும் முறையை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு முழுமையாக ரத்து செய்தது. தொடர்ந்து, மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க, குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததும் மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தான் தற்போது, மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தின் சில அம்சங்களுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேநேரம், உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.






















