Erode By Poll Election: இரட்டை இலை இ.பி.எஸ்.க்கு கிடைக்குமா? 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
அ.தி.மு.க. வழக்கில் 3 நாட்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவில், அ.தி.மு.க. வழக்கில் 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தேர்தல் துணையத்தை எதிர் மனுதாராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு:
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் வலுத்தது. இதையடுத்து, கடந்தாண்டு ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்புகளைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தனது கோரிக்கைகளை முன்வைத்து மேல்முறையீடு செய்தார்.
எடப்பாடி பழனிசாமி மனு:
அந்த மனு மீதான அனைத்து கட்ட விசாரணைகளும் முடிவடைந்து கடந்த 11-ந் தேதி தீர்ப்பை மட்டும் வெளியிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமியை இன்னும் அங்கீகரிக்காத காரணத்தால் ஈரோடு இடைத்தேர்தலுக்கான படிவத்தில் அவரால் கையெழுத்திட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவற்கு வசதியாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனுவில் கடந்தாண்டு ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
3 நாட்கள்:
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி மகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜரானார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளித்தால் வரும் புதன்கிழமை இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வரும். தேர்தல் ஆணையத்தின் பதிலைப் பொறுத்துதான் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை கிடைக்குமா? இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.