Srilanka protest: இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றும்... மீண்டும் தொடங்கிய பழைய போராட்டமும்!
தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அதிபரானதை அடுத்து, மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக, மக்கள் போராட்டம் செய்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஆறு முறை பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். இதனை அடுத்து புதிய அதிபருக்கான தேர்தல் இன்று (ஜூலை 20) நடைபெற்றது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்னர், வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. இதில் இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 134 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலம் நவம்பர் 2024 வரை உள்ளது. அதுவரை ரணில் விக்கிரமசிங்க அதிபராக தொடர்ந்து செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் செயலகம் முன்பு மீண்டும் திரண்டுள்ளனர். விக்ரமசிங்கவை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கை முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
மீண்டும் தொடங்கியது போராட்டம் !
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களின் கோரிக்கையே அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்பதே! அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து பிரதமரும் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அதிபரானதை அடுத்து மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். எந்த மாற்றம் வேண்டும் என்று போராடினார்களோ அது நிறைவேறாமல் பதவி மாற்றம் மட்டுமே நடந்ததையடுத்து மீண்டும் போராட்ட களத்தில் இறங்கினர் இலங்கை மக்கள். இலங்கையின் அரசியல் நிலைமை இவ்வாறாக இருக்க நாட்டின் நிலை என்னாகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்