உச்சகட்ட கோபத்தில் ராமதாஸ்; பாமகவில் அடுத்தகட்ட நகர்வு என்ன தெரியுமா?
அன்புமணி மீதுள்ள கோபத்தில் ராமதாஸ் தலைவர், பொதுச்செயலாளரை மாற்றி நியமிக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களாகவே பாமகவில் அப்பா - மகன் சண்டை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதிமுகவா? பாஜகவா? கூட்டணி யாருடன்? என்பதில் தொடங்கிய இந்த மோதல்.. முகுந்தனுக்கு பதவி கொடுப்பதில் பூதாகரமாகி பொது மேடையிலேயே இருவரும் நேரடியாக முட்டிக்கொண்டனர்.
இதனையடுத்து பாமக தலைவராக அன்புமணி தொடர்ந்து வரும் நிலையில் பாமக நிறுவனரான ராமதாஸ் தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் எனவும் கூறினார்.
அன்புமணி அணி - ராமதாஸ் அணி
இந்த விவகாரத்தை தொடர்ந்து இருவரும் பொதுவெளியிலேயே எதிர்ப்பை காட்டத் தொடங்கினர். எனினும் முழுநிலவு மாநாட்டில் ஒரே மேடையில் கலந்து கொண்டு அமைதி காத்தனர். ஆனாலும் மேடையில் அனைவரையும் பாராட்டிய ராமதாஸ் அன்புமணி பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. இதனையடுத்து கட்சிக்குள்ளேயே அன்புமணி அணி ராமதாஸ் அணி என நிர்வாகிகள் பிரிந்துள்ளனர். தன் பக்க நிர்வாகிகளை வைத்து ராமதாஸ் காய்நகர்த்துவதும் தனது ஆதராவளர்களை வைத்து ராமதாஸ் அணியை களைக்கும் வேலைகளில் அன்புமணியும் ஈடுபட்டு வந்தார்.
அன்புமணியை ஓரம்கட்ட முடிவு?
இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன் அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ராமதாஸ். இப்படி பாமக சிதறிக்கிடக்க கட்சியை ஒருங்கிணைக்க அன்புமணியோ அவ்வப்போது சமாதானக்கொடி காட்டி வருகிறார். ஆனால் மனமிறங்காத ராமதாஸ், ஒரே அடியாக அன்புமணியை ஓரம்கட்ட முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து தான் விரைவில் தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக நியமித்து ஒரு பொதுக்குழு கூட்ட ராமதாஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. காடுவெட்டி குரு குடும்பத்தினருடன் அன்புமணி, ராமதாஸ் என இரு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தாத்தாவையும் தந்தையையும் இணைக்கும் வேலை
மேலும் அன்புமணியின் மகள்கள் வழக்கம்போல் தாத்தாவையும் தந்தையையும் இணைக்கும் வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றனராம்.
இன்று கூட தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்துள்ளார் அன்புமணி. சுமார் 1 மணி நேரம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு, உடைந்து கிடக்கும் பாமகவை மீண்டும் ஒட்ட வைக்குமா இல்லை அப்பா மகன் யுத்தத்தை நீட்டிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






















