கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்.. அட்வைஸ்களை அள்ளி வீசிய சௌமியா அன்புமணி..
சம்சார சங்கீதமாக இருக்க, அன்பு மட்டும் போதாது, மரியாதையும் இருக்க வேண்டும், கணவன் மனைவி என்றால் பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
.சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரோட்டரி கிளப் மெட்ராஸ் சார்பாக சம்சார சங்கீதம் என்ற தலைப்பில், இல்லறமே நல்லறமாக கொள்வது எப்படி என்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தன் கருத்துக்களை பகிர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் விழா மேடையில் பேசிய சௌமியா அன்புமணி கூறியதாவது : இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த போது சென்னை இருக்கக்கூடிய தண்ணீர் பற்றாக்குறை பற்றி பேசலாம் என நினைத்தேன், அதன் பிறகு தான் சொன்னார்கள் சம்சார சங்கீதம் என்ற தலைப்பு என்று, இதுவும் நாம் பேசக்கூடிய ஒன்றுதான்.
அட்வைஸ் செய்ய தெரியாது
பெண்களைப் பற்றி இரண்டு வருடங்களாக 75 கட்டுரைகளை எழுதி வருகிறேன், எனக்கு பெரிதாக அட்வைஸ் பண்ண தெரியாது. யாருக்கும் அட்வைஸ் செய்வதும் பிடிக்காது, காமெடி செய்வதும் எனக்கு பெரும்பாலும் வராது. சம்சார சங்கீதமாக இருக்க, அன்பு மட்டும் போதாது, மரியாதையும் இருக்க வேண்டும், கணவன் மனைவி என்றால் பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும்.
ஆண் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்
அன்பு மட்டும் இருந்து மரியாதை இல்லை என்றால் நல்ல ஒரு சூழ்நிலை இருக்காது. கணவன் மனைவிக்குள் பேசும்போது மரியாதை கொடுத்து பேச வேண்டும். ஏனென்றால் அதனைப் பார்த்து தான் நம் பிள்ளைகள் வளருவார்கள். நம் வீட்டு பெண்களுக்கு நாம் மரியாதை கொடுத்தால் தான், வெளியே இருப்பவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். நம் வீட்டு ஆண் குழந்தைகளும் அதனை கற்றுக் கொள்வார்கள்.
வீட்டு பெண்களுக்கு மரியாதை கொடுங்கள்
வீட்டில் உள்ள சகோதரிகளுக்கு மரியாதை கொடுக்க தெரிந்திருந்தால், அவர்கள் வெளியே சமூகத்தில் செல்லும்போது மற்ற பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். நான் எங்கு சென்றாலும் கூறுவது ஒன்றுதான், வீட்டில் உள்ள பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று, இதையெல்லாம் நான் எனது சொந்த அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
சில நேரம் குழந்தைகளுக்கு இல்லை என்று சொல்ல வேண்டும்
வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான இடத்தை நாம் அளிக்க வேண்டும், குழந்தைகளுக்குத் தேவையான மரியாதை நாம் அளிக்க வேண்டும், நமக்கான மரியாதை கொடுக்க குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். எனது பிள்ளைகளும் இரவு 12 மணிக்கு மேல் கேக் வெட்ட நண்பர்களுடன் செல்கிறேன் என்று கேட்பார்கள். ஆனால் நான் அதை அனுமதிக்க மாட்டேன், எது என்றாலும் வீட்டிலேயே கொண்டாடுங்கள் என்று தான் கூறுவேன். குழந்தைகள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாமல், குழந்தைகளிடம் சில நேரம் இல்லை என்று சொல்ல வேண்டும்.
சமூக வலைதளம் உஷாராக பயன்படுத்த வேண்டும்
பொது தளங்களில் எல்லா புகைப்படங்களையும் பகிர்வது தவறு என நான் நினைக்கிறேன். சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் தனது அன்றாட நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்கிறார்கள், சில தகவல்களை மட்டுமே பகிர நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். டெக்னாலஜிகளை கையாளுவது நமக்குத் தெரிந்திருந்தால் தான் பிள்ளைகளுக்கு கற்றுத் தர முடியும், இதுபோன்று இருந்தால் சங்கீதமாக இருக்கும் என சொல்லவில்லை சத்தம் இல்லாமல் இருக்கும் என்று தான் சொல்கிறேன் என தெரிவித்தார்
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி கூறுகையில் : ஜெனிவாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அழைத்திருக்கிறார்கள். பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நான் உள்ளிட்ட 5 பேர் அக்டோபர் 1 ஆம் தேதி செல்ல இருக்கிறோம். மனித உரிமை ஆணையம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி அது. அதில் சமூகத்தில் பெண்களின் நிலை, பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து பேச இருக்கிறோம். 2018 ஐ.நா வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி ஆண் - பெண் சமத்துவம் ஏற்பட இன்னும் 250 ஆண்டுகள் தேவை என கூறப்பட்டது. அத்தகைய நிலையில் தான் இருக்கிறோம். எனவே பெண்களின் நிலை குறித்து பேச உள்ளோம் என்றார்.