சேலம்: திமுக இளைஞரணி 2வது மாநாடு ஒத்திவைப்பு: மாற்றுத்தேதியை அறிவித்த தலைமைக் கழகம்
திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் டிசம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் டிசம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள இடங்களை ஆய்வு செய்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சேலத்தில் நடக்க விருந்து திமுக இளைஞரணி இரண்டாவது மாநாடு டிசம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழகம் அறிவிப்பு
"மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை - வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால்,
வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















