`அரசுக்கு தரகர் வேலை பார்க்காதீர்கள்!’ - பத்திரிகையாளரிடம் சீறிய ராகுல் காந்தி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் கும்பல் படுகொலைகள் தொடர்பான கேள்வியின்போது பத்திரிகையாளர்களை விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் பகுதியில் உள்ள பொற்கோயிலில் புனிதப் பொருள்களை அவமதித்த நபரைத் தொடர்ந்து நிகழ்ந்த கும்பல் படுகொலைகள் தொடர்பான கேள்வியின்போது பத்திரிகையாளர்களை விமர்சித்துள்ளார்.
மக்களவையையும், மாநிலங்களவையையும் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் காந்தி சிலை முதல் விஜய் சௌக் பகுதி வரையில் பேரணியாகச் சென்றனர். லகிம்பூர் கேரி சம்பவத்திற்குக் காரணமான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பேரணி முடிந்தவுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களிடம் அஜய் மிஷ்ராவைக் காவல்துறை கைது செய்யும் வரை எதிர்க் கட்சிகள் சார்பில் நடத்தப்படும் போராட்டம் நிறுத்தப்படாது எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது பத்திரிகையாளர் சந்திப்பை முடிக்க ராகுல் காந்தி முயன்ற போது, பத்திரிகையாளர் ஒருவர் பஞ்சாபில் நிகழ்ந்த இரு வேறு கும்பல் படுகொலைகள் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, அது ராகுல் காந்தியைக் கோபமூட்டியது.
தொடர்ந்து ராகுல் காந்தி, `அரசுக்குத் தரகர் வேலை பார்க்காதீர்கள்.. விவகாரங்களைத் திசை திருப்பாமல் இருங்கள்’ எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்சர், கபூர்தாலா ஆகிய பகுதிகளில் இரு வேறு கும்பல் படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதால், ராகுல் காந்தியை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி அவரைக் கோபமூட்டியதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம், பஞ்சாப் அம்ரித்சரில் பொற்கோயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் புனிதப் பொருள்கள் அவமதிக்கப்பட்டு, அந்த நபர் அங்கிருந்தவர்களால் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று காலை ஏற்கனவே ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், `2014ஆம் ஆண்டுக்கு முன், கும்பல் படுகொலை என்ற சொல் புழக்கத்தில் இல்லாமல் இருந்தது’ எனக் குறிப்பிட்டு, பாஜக அதிகாரத்திற்கு வந்த 2014-ஆம் ஆண்டைக் குறிப்பிட்டுள்ளதோடு, பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக `நன்றி மோடிஜி’ என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்திருந்தார்.
2014 से पहले ‘लिंचिंग’ शब्द सुनने में भी नहीं आता था।
— Rahul Gandhi (@RahulGandhi) December 21, 2021
Before 2014, the word ‘lynching’ was practically unheard of. #ThankYouModiJi
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்த கருத்துக்குப் பிறகு, பாஜக தரப்பில் ராகுல் காந்தியின் கருத்து கண்டிக்கப்பட்டதோடு, சில மூத்த பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியின் தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி `கும்பல் படுகொலைகளின் தந்தை’ எனக் கூறி விமர்சனம் செய்துள்ளனர்.