பிரதமருக்கு காதுகளாகவும் கண்களாகவும் இருப்பவர்.. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர்.. யார் இந்த கே.கே?
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட கே. கைலாசநாதன், குஜராத் முதல்வர் அலுவலகத்தில் அதிகார மையமாக திகழ்ந்தவர். பிரதமர் மோடிக்கு காதுகளாகவும் கண்களாகவும் விளங்கியவர்.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரிக்கு முழு நேர துணைநிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்தவர் கிரண் பேடி. அதற்கு பிறகு, புதுச்சேரிக்கு முழு நேர துணைநிலை ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே. கைலாசநாதன், புதிய துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீப காலமாக, இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அங்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
மோடிக்கு கண்களாகவும் காதுகளாகவும் இருக்கும் கே.கே:
குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் (சிஎம்ஓ) தலைமை முதன்மைச் செயலாளராக இருந்த கே. கைலாசநாதன், கடந்த மாதம், தானாக முன்வந்து ஓய்வு பெற்றார். 45 ஆண்டுகளாக குஜராத் அரசில் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்தவர்.
குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்தபோது, அதிகார மையமாக திகழ்ந்தவர். கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி, பிரதமரானதை தொடர்ந்து, குஜராத்தில் மோடியின் காதுகளாகவும் கண்களாகவும் இருந்தவர் கே. கைலாசநாதன். சூப்பர் சிஎம் என சொல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றவராக இருந்தார்.
தனக்காகவே உருவாக்கப்பட்ட தலைமை முதன்மை செயலாளர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தபோது, அவருக்கு மத்திய அரசில் முக்கிய பதவி வழங்கப்படும் என பேசப்பட்டது. குறிப்பாக, ஆளுநர் பதவியோ அல்லது துணை நிலை ஆளுநர் பதவியோ வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
குஜராத்தின் 'சூப்பர் சிஎம்': கேரள மாநிலத்தை சேர்ந்த கே. கைலாசநாதன், சென்னை பல்கலைக்கழகத்தில் வேதியியல் முதுகலை பட்டம் பெற்றவர். 1979 குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான கைலாசநாதன், முதல்முறையாக சுரேந்திரநகர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டார்.
பின்னர், சூரத் மாவட்ட ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டார். குஜராத்தின் கிராமப்புற மேம்பாடு, தொழில்துறை, குஜராத் கடல்சார் வாரியம், நர்மதா வாரியம், நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
1994 முதல் 1995ஆம் ஆண்டு வரை, குஜராத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்தார் கைலாசநாதன். 1999 மற்றும் 2001 க்கு இடையில், அகமதாபாத் மாநகராட்சி ஆணையராக பதவி வகித்தார். பின்னர், 2006ஆம் ஆண்டு, குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட்டார்.