வாய் இருக்கிறது என்று சீமான் கொச்சையாக பேசக் கூடாது - பிரேமலதா
பெரியார் குறித்தான சீமானின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் வாய் இருக்கிறது என்பதற்காக கொச்சையாக பேசக் கூடாது.
![வாய் இருக்கிறது என்று சீமான் கொச்சையாக பேசக் கூடாது - பிரேமலதா Premalatha says seeman should not speak vulgarly because he has a mouth tnn வாய் இருக்கிறது என்று சீமான் கொச்சையாக பேசக் கூடாது - பிரேமலதா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/10/8831ab8a8cc1d68bb22281838ef744df1736516938742113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆளுநரை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார்.
தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆளுநரை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், கஞ்சா மற்றும் போதை கலாச்சாராத்தை ஒழிக்க வேண்டும் , புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மதுரை மேலூர் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் ;
விஜயகாந்த் குருபூஜைக்கு 20 நாட்கள் முன்பே சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி கேட்டு ஒரு நாள் முன்பாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்த போதிலும் சட்டத்திற்குட்பட்டு அமைதியான முறையில் பேரணி நடத்தினோம்.
பொங்கல் தொகுப்பில் ஆயிரம் ரூபாய், மழைக்கான நிவாரணம், டாஸ்மாக், போதை பொருட்களை தடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தேமுதிக சார்பாக போராட்டங்களை நடத்த முற்பட்டபோது தமிழ்நாடு அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்தது.
எந்த வகையில் நியாயம் ?
அமைதியான முறையில் சட்டத்திற்க்குட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும் 120க்கும் மேற்பட்ட தேமுதிகவினரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், திமுக ஆளுநரை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது திமுகவுக்கு மட்டும் யார் அனுமதி கொடுத்தது அதும ட்டும் எந்த வகையில் நியாயம்?
திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோதிலும் , எதிர்க் கட்சிகள் ஜனநாயக ரீதியாக போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டால் ஏன் அனுமதி மறுக்கிறது. திமுகவுக்கு ஒரு நியாயம் எதிர்க் கட்சிகளுக்கு ஒரு நியாயமா ? அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்கப்பட்டது. அப்போது திமுகவினர் 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் தற்போது , ஆயிரம் ரூபாய் கூட திமுக அரசால் கொடுக்க முடியவில்லை.
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தான கேள்விக்கு திமுகவின் மூத்த அமைச்சரான துரைமுருகன் தேர்தல் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறார். இந்தாண்டு தேர்தல் நடைபெறவில்லை என்பதற்காக மக்களுக்கு அளிக்க வேண்டிய ஆயிரம் ரூபாயை தரவில்லையா ? அடுத்த ஆண்டு தேர்தல் வரும் என்றால் அப்போது மட்டும் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்கு வாங்கி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறீர்களா ? இது எந்த வகையில் நியாயம்.
வீண் வாய் தான் பேசுறீங்க
அதிமுக ஆட்சியில் 5 ஆயிரம் கொடுக்க சொன்னீர்கள், இப்போது ஆயிரம் ரூபாய் கூட அளிக்காமல் ஒரு 500 ரூபாய் கொடுக்க கூட திமுக அரசால் முடியவில்லையா ? வீண் வாய் தான் பேசுகிறீர்கள். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே நான்கு மணி நேரத்திற்கு மேலாகி உள்ளதாகவும், காவல் துறையினர் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முழுமையான ஆர்வம் செலுத்தவில்லை என்றும் ஆளுநர் எங்களிடம் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் கைதாகியுள்ள ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும். பரங்கிமலை ரயில் நிலைய வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று , பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது. இந்த சட்டத்தில் முதல் தண்டனையாக ஞானசேகரனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் தெரிவித்து உள்ளோம். மக்களுக்கு எதிரான செயல்களை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஆளுநர் கூறியுள்ளார். டங்ஸ்டன் திட்டம் வராது என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பதை நாங்கள் ஆளுநரிடமும் வலியுறுத்தி உள்ளோம்.
மதுரை மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதையும் ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளோம். அதிமுக ஆட்சியில் தஞ்சை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது போல் இதனையும் அறிவிக்க வேண்டும்.
ஓரிரு நாட்களில் முடிவை தெரிவிப்போம்
தேமுதிக இதுவரை தமிழ்நாட்டில் நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் அறிவிப்போம். இடைத்தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு எதிராக மக்களை ஆட்டு மந்தையில் அடைப்பது போல் அடைத்து ஓட்டுக்களை பெற முயற்சி செய்தார்கள். திமுக ஆட்சியில் எந்த இடைத்தேர்தல் வந்தாலும் அராஜக இடைத் தேர்தலாக தான் இருக்கும்.
வாய் இருக்கிறது என்று கொச்சையாக பேசக் கூடாது
சீமான் பெரியார் தொடர்பாக பேசியதற்கு அவரிடம் தான் நீங்கள் பதில் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.பெரியார் நூல்களை நாட்டுடையமை ஆக்குவது நல்ல விஷயம் தானே. பெரியார் யார் என்பது மக்களுக்கு தெரியும். அவர் செய்ததை யாரும் இல்லைனு சொல்ல முடியும். வாய் இருக்கிறது என்பதற்காக எதை எதையோ கொச்சையாக பேசக் கூடாது. வாழ்ந்து மறைந்த தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி தவறாக பேசுவதை தேமுதிக நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)