எவ்வளவு நாள் தான் நாங்களும் ஏமாந்துகிட்ட இருப்பது.! இந்த முறை முடியவே முடியாது- சீறிய பிரேமலதா
தேமுதிகவை ஏமாத்திக்கிட்டே இருந்தா நாங்களும் தொடர்ந்து ஏமாந்துக்கிட்டே இருக்கணுமா என கேள்வி எழுப்பிய பிரேமலதா, இந்த முறை அது நடக்காது நாங்கள் யார் என்பதை வரும் தேர்தலில் நிரூபித்து காட்டுவோம் என தெரிவித்தார்.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திமுக- அதிமுக- தவெக- நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. எனவே பாமக மற்றும் தேமுதிக எந்த பக்கம் செல்லும் என கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு ஜனவரி மாதம் தங்களது நிலைப்பாட்டை அறிவிப்பதாக இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளது. எனவே இந்த இரண்டு கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டு வருகிறது.
தேமுதிக கூட்டணியே வெற்றி
இந்த நிலையில் மதுரை மற்றும் தேனியில் உள்ளம் தேடி இல்லம் நாடி தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், மதுரையில் நான் செல்லாத இடங்களே இல்லை. அனைத்து தேர்தலிலும் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நான் பணியாற்றி உள்ளேன். தேமுதிகவினர் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். விரைவில் கூட்டணி தொடர்பாக நல்ல செய்திகள் வர உள்ளது என கூறினார். கலைஞர் ஜெயலலிதா இருக்கும்போது மிகப்பெரிய சரித்திரத்தை உருவாக்கிய கட்சி தேமுதிக எனவே கேப்டனின் கனவு லட்சியம் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிறைவேறும் என உறுதியாகதெரிவித்தார்.
எவ்வளவு நாள் தான் ஏமாந்துகிட்ட இருப்பது
இதனையடுத்து தேனியில் இல்லம் தேடி, உள்ளம் நாடி நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தேமுதிகவை ஏமாத்திக்கிட்டே இருந்தா நாங்கள் தொடர்ந்து ஏமாந்துக்கிட்டே இருக்கணுமா என கேள்வி எழுப்பியவர், இந்த முறை அது நடக்காது தேமுதிக யார் என்பதை வரும் தேர்தலில் நிரூபித்து காட்டுவோம் என அதிமுகவை மறைமுகமாக விமர்சித்து பேசினார். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறதோ அந்த கூட்டணி தான் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும் என பிரேமலதா தெரிவித்தார்.





















