சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Pawan Kalyan Udayanidhi Stalin: ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் அழிந்து போவார்கள் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டு துணை முதலமைச்சர் உதயநிதியை தாக்கி பேசும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உரை:
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தனசேகர கட்சியின் வாராகி பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசியதாவது “ இங்கு நிறைய பேர் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறீர்கள்.எனவே தமிழில் கூறுகிறேன். அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் தலைவர் சனாதன தர்மம் வைரஸ் போன்றது. அதை அழிக்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு பேசுபவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவித்து கொள்கிறேன். சனாதன தர்மத்தை உங்களால் அளிக்க இயலாது. ஆனால் நீங்கள் அழிந்து போவீர்கள்.
சனாதன தர்மத்தை தாக்கிப் பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது இல்லை. நம்முடைய ராமரை தாக்கி பேசியவர்களை உற்சாகப்படுத்தினீர்கள். இதுபோல் செயல்படக்கூடாது அப்படி செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை:
கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை காமராஜர் அரங்கில் நேற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், “
சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது.
யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, எல்லாவற்றிற்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்தான்” என்று பேசினார்.
மேலும் ”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் - துணை முதல்வர்
இந்நிலையில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.