Opposition Party Meet: பெங்களூரில் 17, 18 தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம்; இம்முறை வைகோ, திருமாவிற்கு அழைப்பு..!
பெங்களூருவில் வரும் 17 மற்றும் 18 தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூருவில் வரும் 17 மற்றும் 18 தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தலைவர் ஈஸ்வரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்படாத கட்சிகளுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழ்நாட்டில் இருந்து மதிமுக, விசிக, கொமுக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2014- ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு என நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த ஜூன் 23ம் தேதி மாநிலம் பாட்னாவில் தங்களது முதல் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர்.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தமிழ்நாரு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் மற்றும் ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சந்தா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜிர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
iஇந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, ”கர்நாடகா தேர்தலில் என்ன நடந்தது என்று அனைவருக்குமே தெரியும். பா.ஜ.க தரப்பில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை சந்தித்து, ஆட்சியை கைப்பற்றியது. அதுபோல் தான் தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெரும். இனி பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களை பார்க்க முடியாது. காங்கிரஸ் ஏழை, எளிய மக்களுடன் இணைந்து நிற்கிறது. ஆனால் பா.ஜ.க ஓரு சில நபர்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது” என கூறினார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதற்கு விசிக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.